Home இலங்கை அரசியல் யாழ்ப்பாணத்தில் பத்து சபைகளை கைப்பற்றுவோம் – அடித்துக் கூறும் கஜேந்திரகுமார் எம்.பி

யாழ்ப்பாணத்தில் பத்து சபைகளை கைப்பற்றுவோம் – அடித்துக் கூறும் கஜேந்திரகுமார் எம்.பி

0

வடக்கில் கூட்டணியாக யாழ்ப்பாணத்தில் 10 சபைகளிலும், வன்னியில் 4 சபைகளிலும்
ஆட்சியமைக்க முடியும் என எதிர்பார்ப்பதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

கூட்டணியாக இணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை உள்ளூராட்சி
மன்றங்களில் ஆட்சியமைக்க முடியும் என எதிர்பார்க்கிறீர்கள் என வினவிய போதே
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சி முன்னிலை

அதன்படி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலுள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களில் 10
சபைகளில் தம்மால் ஆட்சியமைக்க முடியும் எனவும், வன்னி தேர்தல் மாவட்டத்தில்
அநேகமாக 4 சபைகளில் ஆட்சியமைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று தமிழரசுக்கட்சி முன்னிலை வகிக்கும் சபைகளில் அவர்கள்
ஆட்சியமைப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும்,
ஆகவே இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சி சிந்தித்துச் செயற்பட வேண்டும் எனவும்
கஜேந்திரகுமார் வலியுறுத்தினார்.

இதேவேளை, தமிழ்த் தேசிய பேரவையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தர்மலிங்கம்
சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் உள்ளூராட்சி மன்றங்களில்
கூட்டிணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்
(ஈ.பி.டி.பி) தலைவர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை
நடத்தவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அவர்கள் இதனை
மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version