Home இலங்கை கல்வி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்: நீதிமன்றத்தின் உத்தரவு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்: நீதிமன்றத்தின் உத்தரவு

0

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெளியில் கசிந்த வினாக்களுக்கான புள்ளிகளை  பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சட்டமா அதிபர் இன்று( 2) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்ட விதத்தை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று மீள அழைக்கப்பட்டன.

அத்துடன், குறித்த பரீட்சையை மீள நடத்துவது பொருத்தமற்றது என அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாகவும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மன்றாடியார் நாயகம் விராஜ் தயாரத்ன தெரிவித்துள்ளார். 

நீதிமன்ற உத்தரவு

இந்த மனுக்களைப் நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரிக்குமாறு கோரி சட்டமா அதிபர் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாகவும் பிரதி மன்றாடியார் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர், மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உயர்நீதிமன்றம் முன்னதாக இடைக்காலத் தடை உத்தரவு விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version