ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் விரிவான தகவல்கள் அடங்கிய இரகசிய அறிக்கை உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளரால் இன்று (19) கையளிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பகுதி I வினாத்தாளை இரத்து செய்து அதற்கான பரீட்சையை மீண்டும் நடத்துமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கக் கோரி நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
விடுக்கப்பட்ட உத்தரவு
நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் இமேஷா முத்துமாலி, அது தொடர்பான அறிக்கையை கையளித்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பரிசீலிக்கப்பட்டது.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியமாணவர் குழுவொன்றின் பெற்றோர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் வினாக்கள் சில, முன்கூட்டியே வெளியிடப்பட்டமை தொடர்பான விசாரணைகளின் விரிவான அறிக்கையை வியாழக்கிழமை (19) காலை 9.00 மணிக்கு முன் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் நேற்று (18) உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், இது தொடர்பான அறிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், இந்த மனுக்கள் தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 11 ஆம் திகதி அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.