Home இலங்கை அரசியல் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்த புதிய சுகாதார அமைச்சர்

தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்த புதிய சுகாதார அமைச்சர்

0

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalin de Jayatissa), அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று (22) இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் (ACMOA), மருத்துவ நிபுணர்களின் சங்கம் (AMS), அரசாங்க பல்மருத்துவ சங்கம் (GDSA), அகில இலங்கை தாதியர் சங்கம், பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கம் மற்றும் அரசாங்க தாதியர் சங்கம் ஆகியவை பங்குபற்றியிருந்தன.

இதன்போது சுகாதார வல்லுநர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் சரியான சுகாதார சேவையைப் பேணுவதற்கு எடுக்கப்பட வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

சுகாதார அமைச்சர் கோரிக்கை

அத்துடன் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தமது தொழில் பிரச்சினைகளை சுகாதார அமைச்சரிடம் முன்வைத்துள்ளனர்.

 

இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சுடன் இணைந்து தற்போதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது எனவும் இதன் ஊடாக சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கு முறையாக செயற்பட முடியும் எனவும் வலியுறுத்தினார்.

புதிய பிரச்சினைகளை உருவாக்குவதற்கு இடமளிக்காமல், தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரின் ஆதரவையும் வழங்குமாறும் அமைச்சர் விசேட கோரிக்கை விடுத்தார்.

சுகாதார சேவை

மேலும், இந்த நாட்டில் இலவச சுகாதார சேவை சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளதால், சுகாதார நிபுணர்களின் தொழில்சார் கௌரவத்தை சுகாதார அமைச்சு தொடர்ந்தும் பாதுகாக்கும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

இந்த கூட்டத்தில், பிரதி சுகாதார அமைச்சர்  ஹன்சக விஜேமுனி, நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக்க, சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, மேலதிக செயலாளர்கள், பிரதி பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version