10 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) வரி அடையாள இலக்கத்தை (TIN) வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் யூ.டி.என். ஜயவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் “பது சக்தி” என்ற பெயரில் வரி வாரம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”எதிர்வரும் ஜூன் 2 முதல் 7 வரை ஒரு வார காலத்திற்கு இந்த வரி வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், இதன் மூலம் வரி செலுத்துதல் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி அடையாள இலக்கத்தை வழங்கியுள்ளது. ஆனால், இந்த இலக்கங்கள் பல்வேறு தகவல் மூலங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டவையாகும்.
எனவே, மக்களுக்கு நாம் குறிப்பாகக் கூற விரும்புவது, உங்களுக்கு ஏற்கனவே திணைக்களத்தால் வரி அடையாள இலக்கம் வழங்கப்பட்டிருக்கலாம்.
அடையாள அட்டை இலக்கம்
ஆகவே, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு சென்று, உங்கள் அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி உங்களுக்கு வரி அடையாள இலக்கம் வழங்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க முடியும்.
வரி அடையாள இலக்கம் இல்லாதவர்கள், திணைக்களத்திற்கு நேரடியாக வராமல், முதலில் இணையத்தளத்தில் சரிபார்க்கலாம். ஏற்கனவே வரி அடையாள இலக்கம் இருந்தால், அதன் அச்சிடப்பட்ட பிரதியைப் பெற முடியும்,” என்று ஜயவீர மேலும் கூறினார்.