தாயக பகுதிகளில் தற்போது வெளிப்படும் மனித புதைகுழிகள் இங்கு இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை உணர்த்தி நிற்கின்றதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
வவுனியா (Vavuniya) பழைய பேருந்து நிலைய பகுதியில் இன்று (30) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், உள்ளக பொறிமுறையை நாம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றோம். அப்பிடி இருந்த
போதும் அதனையே மேற்கொள்ளுமாறு ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
உள்ளக பொறிமுறை
ஒரு இனப்படுகொலை இடம்பெற்ற நாட்டில் அதனை மேற்கொண்ட குற்றவாளிகளை நீதியின்
முன் நிறுத்துவதற்கு இந்த உள்ளக பொறிமுறை எப்படி சாத்தியமான முறையில்
வழிவகுக்கும் என எமக்கு தெரியவில்லை.
இந்தநாட்டில் குற்றம் இழைத்தவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கி கௌரவிக்கும்
நிலையே தொடர்ச்சியாக இருக்கின்றது.
அத்துடன் தாயக பகுதிகளில் தற்போது வெளிப்படும் மனித புதைகுழிகள் இங்கு
இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை உணர்த்தி நிற்கின்றது.
சர்வதேச விசாரணை
இனப்படுகொலை நடந்துள்ளது என்பதற்கு சாட்சியமாகவே இந்த புதைகுழிகள்
வெளிப்படுகின்றது. இவற்றை செய்தது யார் என்ற உண்மையை சர்வதேச விசாரணை ஒன்றின்
மூலமே அறியமுடியும்.
தொடர்ச்சியாக நீதி கோரி போராடிவரும் நாம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30 ஆம்
திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் சர்வதேச விசாரணையினை
வலியுறுத்தி வடகிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் போராட்டம் ஒன்றையும்
முன்னெடுக்கவுள்ளோம்” என தெரிவித்தனர்.
