திருகோணமலை (Trincomalee) சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணியை
மேற்கொள்வது தொடர்பில் ஆராயும் முகமாக குறித்த வழக்கானது வழக்கு மாநாடு
ஒன்றிற்காக எதிர்வரும் 06ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த
மாநாட்டுக்கு வர வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பூர் காவல்துறை பொறுப்பதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கானது கடந்த தவணை (23) நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த
அறிவுறுத்தலுக்கு அமைய இன்றைய தினம் (30) அழைக்கப்பட்டபோது சட்ட வைத்திய
அதிகாரி மற்றும் தொல்பொருளியல் திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து நீதிமன்ற
அறிக்கையினை கோரியிருந்து.
குறித்த அறிக்கைகளை ஆராய்ந்த நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள்
சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி குறித்த மனித எச்சங்கள்
நீண்டகாலத்திற்கு உட்பட்டவையாக இருப்பதாகவும், அவற்றை மேலதிக ஆய்வுக்கு
உட்படுத்தி காயங்களினூடாக ஏற்பட்ட மரணமா, அல்லது இயற்கை
மரணமா என்பது தொடர்பிலும், குறித்த எச்சங்கள் குற்றத்தின் ஊடான மரணத்தின் மூலம்
சம்பந்தப்பட்டவையா? என அறிய வேண்டி இருப்பதால் மேலும் ஆழமான ஆய்வுக்கு
உட்படுத்த வேண்டி இருப்பதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று தொல்பொருளியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில்
குறித்த பிரதேசத்தில் மயானம் இருந்ததாகவோ அல்லது மயானமாக பயன்படுத்தப்பட்டது
சம்பந்தமாகவோ அல்லது தொல்லியல் திணைக்களத்திற்குரிய பிரதேசமாக இருந்ததாகவோ
எவ்வித தகவல்கள் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த அறிக்கைகளின் பிரகாரம் அந்த பிரதேசத்தில்
அகழ்வுப்பணியை மேற்கொள்வதா, இல்லையா, என்பது தொடர்பாக வழக்கு மாநாடு ஒன்றின்
மூலம் அதற்கான தீர்மானத்தை எடுப்பதற்காக எதிர்வரும் 06ஆம் திகதி வழக்கு மாநாடு ஒன்றை நடாத்துவதற்காக திகதியிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த
மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பூர் காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீட்கப்பட்ட எச்சங்கள்
சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் MAG என்ற
மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில்
ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த 20 ஆம் திகதி குறித்த பகுதியில்
இருந்து சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் என்பு பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கடந்த 23ஆம் திகதி குறித்த பகுதியை மூதூர் நீதிமன்ற நீதிபதி
மற்றும் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள்
திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர்
அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின்
அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இதன்போது சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்
திணைக்களத்திடம் குறித்த பகுதியில் அகழ்வுப்பணியை முன்னெடுப்பது தொடர்பில்
ஆராய்வதற்காக இன்றையதினம் (30) அறிக்கை கோரப்பட்டிருந்தது.
அத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட
ஆய்வின்போது மேலும் சில மண்ட ஓடு, கை, கால், முள்ளந்தண்டு மற்றும் விலா
என்புத் தொகுதிகளைக் கொண்ட மேலும் சில மனித எச்சங்கள்
மீட்கப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
