Home இலங்கை சமூகம் மில்லர் திரைப்படம் குறித்து ஐபிசி தமிழ் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

மில்லர் திரைப்படம் குறித்து ஐபிசி தமிழ் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

0

ஐபிசி தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டு வரும் ‘மில்லர்’ என்ற திரைப்படத்தின் பெயர் “போராட்டம்” என மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த 26.10.2025 ஆம் திகதியன்று இடம்பெற்றது.

இந்நிலையில் அத்திரைப்படம் தொடர்பில் ஐபிசி தமிழ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எமது அடையாளங்களையும், எமக்காக அர்ப்பணித்தவர்களின் அடையாளங்களையும் எமது அன்றாட வாழ்வின் அத்தனை அங்கங்களுக்கும் சூட்டிக்கொள்வதை எமது பெருமைக்குரிய கடமையாக வகுத்துக்கொண்டு வாழ்ந்து வருவதன் விளைவாகத்தான்- ‘மில்லர்’ என முன்னரே பெயரிடப்பட்ட திரைப்படத்தினை நாம் தயாரிக்க முன்வந்தோம்.

எங்களை நேசிக்கின்ற அத்தனை பேருக்கும் இது நன்றாகவே தெரியும்.

எமது இனத்தினது வீரத்தின் அடையாளங்கள்தான் எங்களது தற்கால இருப்பு.

எமது இனத்தினது அர்ப்பணிப்புக்களின் அடையாளங்கள்தான் எமது எதிர்கால வாழ்வு.

பல்வேறு சர்ச்சைகள் 

அந்த அடிப்படையில் தான் நாங்கள் முன்னெடுக்கின்ற அனேகமான முயற்சிகளுக்கு பெயர்களைச் சூட்டி வருகின்றோம்.

பெரும் பொருட்செலவில் நாங்கள் தயாரித்து வருகின்ற திரைப்படத்திற்கு ‘ மில்லர்’ என்று பெயரிட்டிருந்ததும் அதற்காகத்தான்.

ஆனால், அந்த பெயர் தொடர்பான சர்ச்சைகளை சமூக ஊடகங்கள் வாயிலாக பலர் எழுப்பியிருந்ததுடன், தமிழ் உணர்வாளர்கள் பலரும் எமது திரைப்படத்திற்கு ‘மில்லர்’ என்ற பெயரை தவிர்க்குமாறு எங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

எங்களுடைய பயணத்தில் மிக நெருக்கமாகப் பயணித்து வருகின்ற பலர்கூட எம்மை நேரடியாகத் தொடர்புகொண்டு ‘மில்லர்’ என்ற பெயரைத் தவிர்க்கவேண்டும் என்று அன்புடன் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

எங்களைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களின் நன்மைகளைத் தவிர வேறு எது பற்றியும் நாங்கள் யோசிப்பது இல்லை.
தமிழ் இனத்தின் உணர்வுகளைக் கடந்து பெரிதான காரியம் என்று எங்களுக்கு வேறெதுவுமே கிடையாது.

எனவே தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் திரைப்படத்தின் பெயரை மாற்றுவதற்குத் தீர்மானித்து இருக்கின்றோம்.

திரைப்படத்தின் புதிய பெயராக “போராட்டம்” என்பதனை அறிவித்துக்கொள்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version