Home இலங்கை சமூகம் யாழில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம் : உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை

யாழில் அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம் : உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை

0

யாழ். (Jaffna) கந்தரோடையில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கட்டிடத்தின் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் யாழ்.கந்தரோடையில் அமைக்கப்படும் பௌத்த மத்திய
நிலையத்தை நேற்றையதினம் (16) சென்று
பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் என்ற பெயரில் இராணுவ முகாமுக்கு அருகில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டிடம் தொடர்பில் எங்களுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இன்றைய தினம் அதைப் பார்வையிட்டிருக்கின்றோம்.

விகாரைகளை அமைப்பதற்கான ஏற்பாடு

இந்தக் கட்டுமானத்தை நிறுத்துமாறு ஒட்டப்பட்ட பிரசுரம் அகற்றப்பட்டிருக்கின்றது. இந்தக் கட்டுமானத்தை பௌத்த பிக்கு ஒருவர் கட்டுவதாக அறிந்திருக்கின்றோம்.

எதிர்காலத்தில் பௌத்த சின்னங்களை அல்லது விகாரைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் இருப்பதாக அறிகின்றேன்.

அதனால் இதனை உடனடியாக நிறுத்துமாறு கோரியிருக்கின்றோம்.

அதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் சம்மந்தமாக சபை உறுப்பினர்களுடன் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.” என தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது தவிசாளருடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை
உறுப்பினர்களும் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா

NO COMMENTS

Exit mobile version