இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அது தொடர்பான பதவி விலகல் கடிதத்தை இன்று(25) பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சி.ஜே.பி (CJP) அமைப்பிற்கும் இந்திய அரசுக்கும் இடையிலான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் தனது எக்ஸ் (X) கணக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாணவர்களின் முக்கியக் கோரிக்கை
ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியின் ஜந்தர் மந்தரில் முகாமிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களின் முக்கியக் கோரிக்கையாக பிரதானின் பதவி விலகல் இருந்து வந்துது.
Image Credit: Al Jazeera
தர்மேந்திர பிரதானைப் பதவி நீக்கம் செய்யாவிட்டால் பேச்சுவார்த்தை தொடராது என சனிக்கிழமை காலை சி.ஜே.பி தரப்பில் தெளிவுபடுத்தப்பட்ட நிலையில், இந்த பதவி விலகல் மூலம் போராட்டக்காரர்கள் முன்வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றியுள்ளது.
மாணவப் போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதுடன், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பனவும் இதர முக்கியக் கோரிக்கைகளாகும்.
இக்கோரிக்கைகளுக்கு வெள்ளிக்கிழமையன்று அரசு உடன்பட்டிருந்த போதிலும், கல்வி அமைச்சரின் பதவி விலகல் குறித்த முடிவை அறிவிக்காமல் மௌனம் காத்து வந்தது.
பிரதானின் பதிவு
இந்நிலையில், தனது பதவி விலகலை அறிவித்து பிரதான் வெளியிட்ட பதிவில், “இந்த நாட்டின் இளைஞர்களின் அபிலாஷைகள், உணர்வுகள் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகளுக்கு நான் ஆழ்ந்த மரியாதை அளிக்கிறேன்.
இந்தியாவின் இளம் தலைமுறையின் கனவுகளை நனவாக்குவதே நமது அரசியல் மற்றும் சமூக வாழ்வின் தார்மீக உறுதிப்பாடாகும். பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ் தேசத்திற்குச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்தமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், பதவி விலகல் செய்தி வெளியானதுமே ஜந்தர் மந்தரில் உள்ள போராட்டக் களம் கொண்டாட்டத்தில் மூழ்கியதுடன், “மாணவர் சக்தி வாழ்க” என சி.ஜே.பியும் பதிவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் பல நகரங்களில் தீவிரமடைந்த இந்த மாணவர் போராட்டம், எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு மோடி அரசாங்கத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/indian-education-minister-resigns-1784973002
