இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.சுகன்யா என்ற கப்பல் 12 தொன் நிவாரண உதவிப் பொருட்களுடன் திருகோணமலை அஸ்ரப் இறங்கு துறையை வந்தடைந்துள்ளது.
குறித்த கடற்படை கப்பலானது இன்று (01) காலை 10 மணிக்கு இறங்கு துறையை வந்தடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிவாரணப் பொருட்கள் கிழக்கு மாகாணத்தில் தற்போதைய அனர்த்த நிலைகளினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கு வழங்கப்படவுள்ளது.
நிவாரண பொருட்கள்
இந்தக் கப்பலை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் சாய் முரளி,கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகர,கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி ரவீந்திர திசேரா,மாவட்ட அரசாங்க அதிபர்,மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இறங்கு துறையில் வைத்து வரவேற்றனர்.
இதனை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை கப்டன் முகுந்,இலங்கையின் கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவிடம் நிவாரண பொருட்களை இறங்கு துறையில் வைத்து ஒப்படைத்தார்.
“சமுத்திரத்தில் தோழமை” (சாஹர் பந்து) என்ற உதவித்திட்டத்தின் கீழ் உணவுப்பொருட்கள், மருந்து பொருட்கள், குடிநீர், படுக்கை விரிப்புக்கள், சுகாதார சுத்திகரிப்பு பொருட்கள், உடைகள், துவாய்கள், பெண்களுக்கான சுகாதார துவாய்கள் கொண்ட இந்த நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
நன்றி தெரிவிப்பு
நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், பிரதி அமைச்சர் அருண்
ஹேமச்சந்திரா இந்தியக் கடற்படையினருக்கும், இந்திய அரசாங்கத்திற்கும்
தமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
இந்தியா, எமது அண்டை நாடு என்ற முறையில், எப்போதும் இலங்கையின் தேவைகளைப்
பூர்த்தி செய்வதில் முதல் இடத்தில் நிற்கிறது.
இன்று, ஐ.என்.எஸ் சுகன்யா கப்பல்
மூலம் வந்துள்ள 12 தொன் நிவாரணப் பொருட்களில் உள்ள உயிர்காக்கும் மருந்துப்
பொருட்களும் அத்தியாவசியப் பொருட்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
இது இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள ஆழமான மற்றும் நீடித்த நட்புறவின் உறுதியான
அடையாளமாகத் திகழ்கிறது.
இந்த மனிதாபிமான உதவியை வழங்கிய இந்திய
அரசாங்கத்திற்கும், சுகன்யா கப்பல் தளபதி எஸ். கே. வர்மா தலைமையிலான இந்தியக்
கடற்படைக்கும், எமது நாட்டின் மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது மக்களுக்குத் தேவையான இந்த நேரத்தில் வழங்கப்பட்ட ஆதரவு ஒருபோதும்
மறக்கப்படாது எனத் தெரிவித்துள்ளார்.
