Home இலங்கை இலங்கைத் தமிழர்களை கேவலப்படுத்தும் தென்னிந்திய ஊடகங்கள் : பின்னணியில் அரங்கேற்றப்படும் சதி

இலங்கைத் தமிழர்களை கேவலப்படுத்தும் தென்னிந்திய ஊடகங்கள் : பின்னணியில் அரங்கேற்றப்படும் சதி

0

அண்மைக்காலமாக சர்வதேச ஊடகங்களில் இலங்கைத் தமிழர்கள் வறுமையில் வாடுவதாகவும், போரினால் நலிந்து போயுள்ளதாகவும் என்ற விம்பத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.

சர்வதேச மேடைகளில், குறிப்பாக தென்னிந்திய தொலைக்காட்சிகளில் இலங்கையின் வறுமை என்பது ஒரு நுட்பமாக, அனுதாபம் என்ற பெயரில் விற்கப்படும் செயல்முறையாக பரவலாக காணப்படுகின்றது. 

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் அண்மைக்காலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பலராலும் மிகவும் இரசிக்கப்பட்டு வரும் நிகழ்ச்சியாக பாடல் போட்டி  நிகழ்ச்சிகள் முதன்மை பெற்று வருகின்றன.

அனுதாபத்திற்கு குறைவே இல்லை

இந்த நிகழ்ச்சிகள் காலகாலமாக மக்களால் விரும்பப்பட்டு பார்க்கப்படும் நிகழ்ச்சிகளாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சிகளில் இலங்கை போட்டியாளர்களை காட்டும் விதம் விமர்சனங்களையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

இது போன்ற செயற்பாடுகள் மக்களிடத்தில் தமது தொலைக்காட்சியை நிலை நிறுத்தும் என்ற பாரிய நம்பிக்கையை உந்துகோளாக கொண்டு, மிக மோசமான ஒரு சமூகத்தை, அவர்களது வறுமையை விற்பனை செய்யும் மோசடி வேலைகளைத் தான் இந்த ஊடகங்கள் கையாண்டு வருகின்றன. 

இலங்கையில் வாழ்ந்து வரும் ஒவ்வொரு சமூகத்தினரும், தங்களது வாழிடம், தொழில் உள்ளிட்டவற்றால் வேறுபடுகின்றனர். குறிப்பாக தமிழர்களைப் பொறுத்தமட்டில், வடக்கு – கிழக்கு அதிகமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, பாதிப்புக்களைக் கொண்ட பகுதியாக காணப்படும்.

மலையகத்தைப் பொறுத்தமட்டில் தேயிலைத் தோட்ட தொழில்துறையை
நம்பி வாழ்வாதாரத்தைக் கொண்ட பகுதியாக காணப்படும்.

இங்கு வறுமை என்பது  பொதுவானதே.  இருப்பினும், இதே வறுமையை ஆதாரமாகக் கொண்டு பட்டம் பெற்று, பல்வேறு துறைகளில் சாதித்த, சாதித்துக் கொண்டிருக்கும், சாதிக்க காத்திருக்கும் பல தலைமுறைகள் இங்கு உண்டு.

ஆனால், இதேபோன்று தனது திறமைக்கு அங்கீகாரம் தேடி தென்னிந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் இலங்கையர்கள்  விற்பனைப் பொருட்களாக நோக்கப்படுவது என்பது நிச்சயமாக பணத்திற்காக ஒரு சமூகத்தையே இழிவுபடுத்தும் மோசடியாகவே பார்க்கப்பட வேண்டும். 

அங்கு திறமையைவிட, வறுமைக்கும், அனுதாப அலைக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.  திறமையாளர்களின், சமூகம், வறுமை, கண்ணீர், ஏன் திறமையும் கூட ஒரு தொலைக்காட்சியின் வருமானத்திற்காக விற்பனை செய்யப்படுகின்றது. 

இலங்கையில் இருந்து வந்த போட்டியாளர்கள் என்றால், ஒன்று தேயிலைத் தோட்டத்தில் நொந்து மடிந்து சாப்பாட்டிற்கும் வழியில்லாமல், உண்டியலை உடைத்து விமானம் ஏறிச் சென்றிருக்க வேண்டும்.

இல்லையேல், யுத்தத்தில் செல்லடிப்பட்டு, உறவினரை தொலைத்து யுத்த வடுக்களை  சுமந்து சென்றிருக்க வேண்டும்.  இவற்றையெல்லாம் தவிர்த்து ஒரு சாதாரண திறமையாளனாக அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தொலைக்காட்சி நிறுவனத்தார் விரும்புவதில்லை. 

போட்டியாளர்களின் திறமைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றதோ இல்லையோ அங்கு அனுதாபத்திற்கு குறைவே இல்லை என்றே கூறலாம்.

ஒரு சோகக் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி மிகச் சிறப்பாக இலங்யைர்களின் வறுமையையும், திறமையையும் சேர்த்து விற்பனை செய்கிறது இந்த ஊடகங்கள். 

இன்னமும் பரிதாபமான சூழல்

மேற்கூறிய அனைத்து இக்கட்டான சூழல்களும், வறுமையும் இன்னும் மாறிவிடவில்லை.  இருப்பினும் கால மாற்றத்தால் இலங்கையிலுள்ள மக்கள் அவ்வாறான சூழ்நிலைகளில் இருந்து படிப்படியாக வெளிவந்தாலும் சர்வதேச அளவில்  இலங்கையை இன்னமும் பரிதாபமான சூழலிலேயே இந்த நிகழ்ச்சிகள் சித்தரித்து காட்டுகின்றன.

இவ்வாறாக நிகழ்ச்சிகள் ஒருபுறம் இருக்க சில தமிழ் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் அதிலே இன்னமும் இலங்கை யுத்தம், அகதிகள், வறுமை இவை அடிக்கடி அங்கு கையாளப்படும் உத்திகளாக பார்க்கப்படுகிறது.

அதாவது இவற்றை வைத்தே திரைப்படத்திற்கான வசூலை ஈடு செய்யலாம் என்ற ஒரு கண்ணோட்டத்தில் இன்றைய சினிமாத்துறை இயக்குநர்கள் பலர் உள்ளனர்.

இலங்கையில் தமிழ் மக்களிடையே எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதை முறையாக ஆராய்ந்து அதற்கான கால மாற்றத்தை ஏற்படுத்துவதே ஊடகங்களின் செயற்பாடாகும்.

ஆனால் இங்கு அதன் உண்மை நிலையை ஆழமாக பேசாமல், “emotional selling” ஆக வடிவத்தில் பயன்படுத்தப்படுவது வேதனைக்கு உரியதாகும்.

மௌன வன்முறை

கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள் “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்” என்று இஙகு அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

உண்மையிலேயே இலங்கையின் வறுமை, அதன் வரலாற்றுப் பின்னணி, யுத்த விளைவுகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகியவை மனித துயரங்களாகும்.

ஆனால், இந்த வறுமை நிலைமை, குறிப்பாக தென்னிந்திய ஊடகங்கள், கலை மேடைகள் மற்றும் சமூக தளங்களில் ஒரு “உணர்ச்சி பொருளாக” மாற்றப்பட்டுள்ளமை கவலைக்குரியது.

இவை  உண்மையை மறைக்கும் விடயங்களாகவும் நிதி சுரண்டுவதற்குரிய இடமாகவும் மக்கள் துயரங்களை பிரதிபலிக்கின்ற பெயரில், அரசியல் சுயநலம் மட்டும் சாதிக்கப்படும் நிலையிலும் காணப்படுகின்றன.

இந்த செயற்பாடுகள், மக்கள் துயரங்களை தமது நிகழ்ச்சிகளின் கருவிகளாக மாற்றும் “மௌன வன்முறையாக” உள்ளது.

இது எதிரொலிக்க வேண்டிய விவாதமாக இருக்க வேண்டும். வறுமையைப் பேசும் ஒவ்வொரு வாய்ப்பும், மாற்றத்தை நோக்கிய அழைப்பாக மாறவேண்டும்

பார்ப்பவர் கண்களுக்கான கண்ணீராக அல்ல, செயலுக்கான சிந்தனையாக இது காணப்பட வேண்டும்.

ஒருவேளை சர்வதேச அளவில் இலங்கையின் துயரம் காட்டப்பட வேண்டிய சூழல் அவசியமாக இருந்தால், இலங்கைத் தமிழ் மக்களின் துயரத்தை மட்டும் அல்ல, நாட்டின் பொருளாதார மற்றும் சமூக நிலையையும் தென்னிந்திய ஊடகங்கள், சமூக அமைப்புகள், திரைப்படங்கள், வணிகத் தொடர்புகள் மற்றும் அரசியல் தளங்களில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும்.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Rukshy அவரால் எழுதப்பட்டு,
31 May, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.

<!–


இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,

–>

NO COMMENTS

Exit mobile version