கிளிநொச்சி இரணைமடு நீர்த்தேக்கம் தொடர்ந்தும் நிரம்பி வழிந்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, கிளிநொச்சி நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 37 அடி 9 அங்குலமாக அதிகரித்துள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
தொடர் மழை
இரணைமடு நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு அதிகரித்து வருவதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த நீர்த்தேக்கத்தின் 14 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும், ஆறு வான் கதவுகள் சுமார் ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய எட்டு வான்கதவுகள் சுமார் ஆறு அங்குலம் வீதம் திறக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி நீர்த்தேக்கத்தின் வான் மட்டம் 36 அடி என்றும் மாவட்ட நீர்ப்பாசன அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறீதரன் வலியுறுத்தல்
இந்நிலையில் இரணைமடு மற்றும் அக்கராயன் குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழும்
நன்னீர் மீன்பிடியை ஜீவனோபாயமாகக்
கொண்ட மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் நேற்றைய கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
அவர்களுக்கு
சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட வள்ளங்கள் காணாமல் போயுள்ளன என்றும், எனவே இவ்
விடயங்களை கருத்தில்கொண்டு அவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கக்கூடிய உரிய
வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன், வெள்ள நீரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்துக்குப்
பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் பல்லவராயன் கட்டு,கிராஞ்சி போன்ற
வீதிகளை உடனடியாக சீரமைக்கும் பணிகளை முன்னெடுக்குமாறும், புனரமைப்புக்கான
பணிகள் தாமதப்படும் வீதிகள் தொடர்பிலும் ஆளுநரது கவனத்திற்கு கொண்டு சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி – கஜி
