Home இலங்கை அரசியல் திருகோணமலை மாநகர சபையின் புதிய மேயர் நியமனம் – தமிழரசுக்கட்சி அறிவிப்பு

திருகோணமலை மாநகர சபையின் புதிய மேயர் நியமனம் – தமிழரசுக்கட்சி அறிவிப்பு

0

திருகோணமலை (Trincomalee) மாநகர சபை மேயராக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றியீட்டிய கந்தசாமி செல்வராசா பரிந்துரை
செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

திருகோணமலை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த முடிவை நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட குழு தலைவருமான சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) தெரிவித்தார்.

சபைக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு குறித்த தெரிவானது ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

25 உறுப்பினர்கள் தெரிவு

திருகோணமலை முதலாவது மாநகர சபைக்காக தமிழரசுக் கட்சி சார்பில் 9 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பாக 4 உறுப்பினர்களும், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் சார்பாக தலா 1 உறுப்பினர்களுமாக மொத்தமாக 25 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இங்கு ஆட்சியமைப்பதற்கு 13 உறுப்பினர்கள் தேவைப்படுகின்ற நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கவுள்ளதாக நேற்று (27) தெரிவித்திருந்தது.

இந்ம நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இன்று மேயர் தெரிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version