Home இலங்கை சமூகம் 2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு!வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி!

2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு!வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி!

0

2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு
செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு
யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண
ஆளுநர் நா.வேதநாயகனூடனான சந்திப்பின்போது உறுதியளிக்கப்பட்டது.

வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான
சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றுமுன்தினம் (04)
நடைபெற்றது.

கோரிக்கை

இந்தச் சந்திப்பில் வர்த்தக சங்கத்தால் பல்வேறு விடயங்கள்
முன்வைக்கப்பட்டு அவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

யாழ்ப்பாணம் நவீன சந்தை கட்டடத் தொகுதியிலுள்ள பல கடைகளின் உரிமம் மாற்றம்
தொடர்பான நடவடிக்கை கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அது
பெருமளவுக்கு நடைபெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில்
கவனமெடுத்து விசேடமாக ஆளணியை நியமித்து விரைவாக நிறைவுசெய்வதற்குரிய
ஒழுங்குகளை முன்னெடுக்குமாறு யாழ். மாநகர சபையின் மேயர் மற்றும் ஆணையாளரை
ஆளுநர் கோரினார்.

உரிமம் மாற்றத்தை செய்வதன் ஊடாக மாநகர சபைக்கான வருமானம் பல
கோடி ரூபாக்கள் வரையில் கிடைக்கப்பெறும் என்பதையும் வர்த்தக சங்கப்
பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

நவீன சந்தைக் கட்டடத் தொகுதியிலுள்ள வாகனத் தரிப்பிடம் தொடர்பிலும் வர்த்தக
சங்கப் பிரதிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

 யாழ்ப்பாணம் 

அவர்களால்
அடையாளப்படுத்தப்படும் இடத்தின் பொருத்தப்பாட்டை நேரில் சென்று ஆராய்ந்து
நிறைவேற்றிக் கொடுக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் நவீன சந்தைக்
கட்டடத் தொகுதியிலுள்ள மலசலகூடம் உள்ளிட்ட நகரப் பகுதியிலுள்ள மலசலகூடங்களின்
சீர்கேடுகள் தொடர்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டனர்.

அவற்றை உரியமுறையில் சீர்செய்வதுடன் தொடர் பராமரிப்புக்குரிய நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறும் ஆளுநர் கோரினார்.

மேலும் நவீன சந்தைக் கட்டடத் தொகுதிக்கு
வர்ணப்பூச்சு மேற்கொண்டு பல ஆண்டுகள் கடந்திருக்கும் என குறிப்பிட்ட வர்த்தக
சங்கப் பிரதிநிதிகள், யாழ். நகரின் மையப்பகுதி இவ்வாறு பாழடைந்தமை போன்ற
தோற்றப்பாட்டில் இருப்பது நகருக்கு அழகல்ல எனவும் சுட்டிக்காட்டினர்.

அவற்றை
வர்ணப்பூச்சு பூசி அழகுபடுத்துவதுடன் மரங்களை வைத்து அழகுபடுத்துவதற்குரிய
ஒழுங்குகளை மாநகர சபையை மேற்கொள்ளுமாறும் தேவையான ஒத்துழைப்புக்கள்
வழங்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில்
ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன
என்பது தொடர்பிலும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

வழங்கிய உறுதிமொழி

பொருத்தமான
இடங்களை அடையாளம் கண்டு சிலைகளை வைப்பதற்குரிய ஒழுங்குகளைச் செய்வதுடன்,
ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள சிலைகளை உயிரோட்டமாக தென்படக்கூடியவாறான வர்ணப்பூச்சு
வேலைகளையும் முன்னெடுக்குமாறு ஆளுநர் கோரினார்.

யாழ்ப்பாண நகரிலுள்ள கழிவு வாய்க்கால்கள், குப்பைகள் தொடர்பிலும்
பிரஸ்தாபிக்கப்பட்டது.

அவற்றை துப்புரவு செய்வதற்கான முயற்சிகள் மாநகர சபை
எடுத்துள்ள நிலையில் அதனை துரிதப்படுத்துமாறும் அதற்கான ஒழுங்குமுறைகளையும்,
தண்டங்களையும் அறிமுகப்படுத்துமாறும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை
விடுத்தனர். மாநகர சபையை அதனைச் செயற்படுத்துமாறு ஆளுநர் குறிப்பிட்டார்.

மேலும், யாழ்ப்பாண நகரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவழிப் பாதையூடாக
வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாக வர்த்தக சங்கப் பிரதிநிதிகள்
சுட்டிக்காட்டினர். வர்த்தகர்களைத் தவிர ஏனையோர் அவ்வாறு ஒருவழிப்
பாதையாக்கியதன் ஊடாக போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளதை
ஆளுநர் குறிப்பிட்டார்.

நகரின் மத்தியிலுள்ள பேருந்து நிலையத்தாலேயே அந்த
நெரிசல் ஏற்பட்டது என்பதையும், தனியாரும், இலங்கை போக்குவரத்துச் சபையினரும்
நெடுந்தூர பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்குவதன் ஊடாக
இதனைச் சீர் செய்ய முடியும் என்பதையும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள்
தெரிவித்தனர்.

அத்துடன் பேருந்து நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கடைகளால்
அங்கு இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய பேருந்து நிலையம்
அபிவிருத்தி செய்யப்படும்போது அங்குள்ள கடைகள் அகற்றப்படும் என ஏற்கனவே இலங்கை
போக்குவரத்துச்சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் மாவட்டச் செயலக
கூட்டத்தில் தெரிவித்ததை நினைவுகூர்ந்த ஆளுநர், நெடுந்தூர பேருந்துகள் புதிய
பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்ட பின்னர் வீதியின் நெருக்கடி நிலைமையை
அவதானித்து நிலைமையை ஆராயலாம் எனக் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், மாநகர சபையின் கௌரவ
மேயர், மாநகர சபையின் ஆணையாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version