Courtesy: Sivaa Mayuri
இலங்கை அதிகாரிகளின் கோரிக்கைகளையும், நாட்டின் பொருளாதார நிலையையும் முதலில் ஆராய்ந்த பின்னரே இலங்கையில் புதிய திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் ஜப்பான் பரிசீலிக்கும் என்று ஜப்பானிய (Japan) தூதரகம் தெரிவித்துள்ளது.
எனினும் கடன் மறுசீரமைப்பிற்குப் பின்னர், முன்னர் ஆரம்பிக்கப்பட்ட 11 திட்டங்களை மேற்கொள்வதே தமது முன்னுரிமை என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
அதிகாரபூர்வமாக 11 கடன் திட்டங்கள்
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் ஜப்பான் புதிய திட்டங்களை உறுதியளித்துள்ளதா என்ற கேள்விக்கே தூதரகம் இந்த பதிலை வழங்கியுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் 11 திட்டங்களின் நிலை குறித்து கருத்துரைத்துள்ள தூதரகம், பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய விரிவாக்க திட்டம் உட்பட பெரும்பாலானவை சுமுகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜப்பானிய நிதியுதவியுடன் களு கங்கை நீர் வழங்கல் விரிவாக்கத் திட்டம், அனுராதபுர வடக்கு நீர் வழங்கல் திட்டம், கண்டி நகர கழிவு நீர் முகாமைத்துவத் திட்டம், மேல் மாகாண திண்மக் கழிவு முகாமைத்துவத்தை உருவாக்குவதற்கான திட்டம், திறன் அபிவிருத்திக்கான திட்டம், நகர்ப்புற திட்டமிடல், நீர் பொறியியல் மற்றும் பயன்பாட்டு மேலாண்மை எதிர்கால தலைவர்கள் பயிற்சி திட்டமும்,
மனித வள மேம்பாட்டுக்கான திட்டம் புலமைப்பரிசில், பயனுள்ள பொது முதலீட்டு முகாமைத்துவத்திற்கான திறன் மேம்பாட்டிற்கான திட்டம், டெரஸ்ட்ரியல் டிவி ஒளிபரப்பு திட்டத்தின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் இலங்கையில் வடக்கு மாகாணத்தில் உள்ள மீன்பிடி மற்றும் விவசாய கிராமங்கள், பால்வள மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
2024, ஜூலை 22 அன்று இலங்கை தொடர்பில் அனைத்து அதிகாரபூர்வ கடன் குழு உறுப்பினர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து ஜப்பான், இலங்கையில் அதிகாரபூர்வமாக 11 கடன் திட்டங்ககளை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்தது.