Home இலங்கை சமூகம் இலங்கையை உலுக்கிய கோர விபத்து – பேராபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையை உலுக்கிய கோர விபத்து – பேராபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

0

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயரமானதென அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

மண் சரிவு ஏற்பட்ட இடமும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் ஆபத்தான பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கண்டி மேலதிக மாவட்டச் செயலாளர் திலித் நிஷாந்தா குறிப்பிட்டுள்ளார்.

பாதிப்புக்குள்ளான கட்டடத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து ஆராயப்படும் என்றும், அந்தப் பகுதியைச் சுற்றி இன்னும் பல ஆபத்தான பாறைகள் உள்ளன என்றும், இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தொழில்நுட்பம் 

விபத்தின் போது கொங்ரீட் தளத்திற்குள் சிக்கியிருந்தவர்களை காப்பாற்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் உள்ள பஹல கடுகண்ணாவ கணேதென்ன பகுதியில் நேற்று முன்தினம் வீடு மற்றும் உணவகத்தின் மீது ஒரு பெரிய பாறை மற்றும் மண் மேடு சரிந்து விழுந்ததில், விரிவுரையாளர் உட்பட ஆறு பேர் உயிரிழ்ந்தனர்.

காயமடைந்த நான்கு பேர் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை மோசமடைந்தமையினால் கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களில் உணவகத்தில் பணிபுரிந்த மூன்று பேரும், உணவு பெற வந்த மூன்று பேரும் அடங்குவர். உணவக உரிமையாளரின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சமையல்காரர், உணவு பெற வேனில் வந்த இரண்டு பேர் மற்றும் காரில் வந்த ஒரு நபர் ஆகியோர் உயிரிழந்தவர்களில் அடங்குவதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று முன்தினம் காலை 9.00 மணியளவில் நிகழ்ந்தது. ஒரு சில நிமிடங்களில் அந்த இடமே தரைமட்டமானதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்பு பணி

முப்படையினருடன் அந்தப் பகுதி மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கடும் மழையிலும் இடிபாடுகளில் சிக்கிய இறந்தவர்களின் உடல்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும் நடவடிக்கை இரவு 7.30 மணி வரை 10 மணி நேரம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் இறுதிச் சடங்கு செலவுகளுக்கு 100,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், மீதமுள்ள தொகை பின்னர் வழங்கப்படும் என்றும் கேகாலை மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version