முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு (KeheliyaRambukwella) தண்டனை வழங்குவதற்கு நடைமுறையிலுள்ள சட்டங்கள் போதாவிட்டால், புதிய சட்டமியற்றியேனும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று (20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”கெஹெலிய ரம்புக்வெல்ல தேசிய குற்றமிழைத்திருக்கின்றார். அவருக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டம் போதாவிட்டால், புதிதாக சட்டமியற்றியேனும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
தரமற்ற மருந்து இறக்குமதி
அவரது செயற்பாடுகளால் பல உயிர்கள் பறிபோயிருக்கின்றன. மருந்தின் மீதிருந்த நம்பிக்கையால் விசேட வைத்திய நிபுணர்கள் கூட நோயாளர்களுக்கு குறித்த மருந்துகளை வழங்கியிருக்கின்றனர்.
இவர்கள் அனைவரையும் ஏமாற்றும் வகையிலேயே கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் செயற்பட்டிருக்கின்றனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய அவருக்கு விரைவில் உரிய தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்“ என தெரிவித்தார்.
