பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த
“கெஹெல்பத்தர பத்மே” என்பவரின் சகாக்கள் மூவர் வத்தளை பிரதேசத்தில் வைத்துப்
பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வத்தளை – பல்லியவத்த பிரதேசத்தில் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை(30) மாலை
மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது மூன்று சந்தேகநபர்களும் ஐஸ்
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
பொலிஸாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட மூவரும் “கெஹெல்பத்தர பத்மே”
என்பவரின் சகாக்கள் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மூன்றரைக் கோடி
ரூபா பெறுமதியானது எனப் பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வெலிசறை நீதிவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா
பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்
போது “கெஹெல்பத்தர பத்மே” உள்ளிட்ட பாதாள உலகக் குழுவினர் கடந்த ஓகஸ்ட் மாதம்
கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து பொலிஸ் தடுப்புக்
காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
