Home இலங்கை சமூகம் கலாசார சித் ரூ- 2025 நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டம் மூன்றாமிடம்!

கலாசார சித் ரூ- 2025 நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டம் மூன்றாமிடம்!

0

கலாசார சித் ரூ- 2025 நிகழ்வில் குழு நடனத்தில் கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்றுச் சாதனை படைத்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக
சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “சித் ரூ-2025” கலை
நிகழ்ச்சி நேற்று(05) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர
குமார திசாநாயக்க  தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, மாகாணங்களிலிருந்து வெற்றி பெற்ற கலை நிகழ்வுகள் இங்கு அரங்கேற்றம்
செய்யப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டம்

வடக்கு மாகாண போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட
கிளிநொச்சி மாவட்டம் இவ்வாறு பங்கு பற்றி மூன்றாமிடத்தை பெற்று கிளிநொச்சி
மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

இலங்கை முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அரசாங்கத்தினால்
நடைமுறைப்படுத்தப்படும் “ஒன்றாக – கைவிடாத” என்ற தேசிய கொள்கைக்கு இணங்க,
அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து சமூகமயப்படுத்தல், வலுப்படுத்தல்,
புனர்வாழ்வு மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் பங்கேற்பவர்களாகவும்
பெருமைமிக்க பிரஜைகளாகவும், வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த சமூக சேவைகள்
திணைக்களம் அதன் ஒரு மூலோபாயங்களில் ஒன்றாக “சித் ரூ” கலை நிகழ்ச்சியை
ஏற்பாடு செய்கிறது.

குறித்த நிகழ்வு 06 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் புனர்வாழ்வு, வலுப்படுத்தல் மற்றும் பாதுகாப்புக்காக
சமூக சேவைகள் திணைக்களத்திற்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 632
மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

விருது

“சித் ரூ-2025” மாகாணப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் வழிகாட்டல்
மையங்கள், சிறுவர் பராமரிப்பு மையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களைச்
சேர்ந்த பிள்ளைகளுக்கு ஜனாதிபதி பரிசுகளையும் விருதுகளையும் வழங்கினார்.

பிள்ளைகளுடன் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அவர்களுடன் குழு
புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.

மாணவியொருவரால் வரையப்பட்ட ஜனாதிபதியின் புகைப்படம் ஒன்றும் ஜனாதிபதி
அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர்
உபாலி பன்னிலகே, பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, கிராமிய அபிவிருத்தி, சமூகப்
பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செயலாளர் சம்பத்
மந்திரிநாயக்க, சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தர்ஷனீ கருணாரத்ன
மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தநிகழ்வில் கலந்து
கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version