கரண் ஜோஹர் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘KILL’ ஆக்ஷன் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
இராணுவ கமேண்டோ அம்ரித் (லக்ஷ்யா) தனது காதலி துலிகாவுக்காக (தான்யா மனிக்டலா) அவர் செல்லும் டெல்லி ரயிலில் பயணிக்கிறார். அந்த ரயிலில் பயணிகளிடம் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி, ஃபானியின் கும்பல் ஏறுகிறது.
ஒரு கட்டத்தில் துலிகாவின் தந்தை ஒரு தொழிலதிபர் என்பதை அறியும் கொள்ளை கும்பலின் தலைவன் ஃபானி, அவரை வைத்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்.
அதன் பின்னர் அம்ரித் தனது இராணுவ நண்பருடன் சேர்ந்து துலிகாவின் குடும்பத்தையும், பயணிகளையும் எப்படி காப்பாற்றினார் என்பதே படத்தின் மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான லக்ஷ்யா அறிமுகமாகியிருக்கும் படம் இது. முதல் படம் என்று கூறமுடியாத அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார்.
கதாநாயகி தான்யாவுடன் ரொமான்ஸ் செய்யும் ஒரு சில காட்சிகளில் லவ்வர் பாயாக இருக்கும் லக்ஷ்யா, சண்டைக்காட்சி என்று வந்ததும் அதகளம் செய்கிறார். தான்யாவுக்கு அதிக வேலை இல்லையென்றாலும், அவரது கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
வில்லன் ஃபானியாக நடிகர் ராகவ் ஜுயல் நக்கல் கலந்த வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். நமக்கு தெரிந்த ஒரே முகமான ஆஷிஷ் வித்யார்த்தியும் வில்லனாக ஸ்கோர் செய்திருக்கிறார்.
படம் முழுக்க சண்டைக்காட்சிகளாகவே இருந்தாலும், எங்கும் சலிப்பு ஏற்படாத வண்ணம் திரைக்கதையை சுவாரசியமாக வடிவமைத்துள்ளார் இயக்குநர் நிகில் நாகேஷ் பட்.
இராணுவத்தில் சேர ஆசைப்படும் சிறுவன், பயணிகளை காப்பாற்ற ஹீரோவுடன் சேர்ந்து போராடும் நண்பன் என ஒரு சில கதாபாத்திரங்கள் எமோஷனல் காட்சிகளுக்கு வலுசேர்க்கின்றன.
இரண்டு மணிநேரத்தில் நடக்கும் கதை என்பதால் படத்தை 1 மணிநேரம் 46 நிமிடங்களுக்கு எடிட் செய்திருக்கும் இயக்குநரை பாராட்டலாம்.
எனினும், படம் முழுக்க இரத்தம் தெறிக்க வரும் வன்முறை காட்சிகள் குழந்தைகள், குடும்பத்துடன் பார்க்க முடியாது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
க்ளாப்ஸ்
விறுவிறுப்பான திரைக்கதை
அதிரடி சண்டைக்காட்சிகள்
பின்னணி இசை
நடிகர்களின் நடிப்பு
பல்ப்ஸ்
அதீத ரத்தம் தெறிக்கும் காட்சிகள்
மொத்தத்தில் அதிரடி சண்டைக்காட்சிகளுடன், படுஸ்பீடான திரைக்கதையுடன் படம் பார்க்க விரும்பும் ஆக்ஷன் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இந்த KILL.