Home இலங்கை சமூகம் பூஜா பூமி என்ற போர்வையில் தொடரும் நில ஆக்கிரமிப்பு

பூஜா பூமி என்ற போர்வையில் தொடரும் நில ஆக்கிரமிப்பு

0

வடக்கு கிழக்கில் தமிழர் தாயகங்களில் பெரும்பான்மை இன சமூகம் இல்லாத இடங்களில்
தமிழர்களின் பாரம்பரிய வரலாறு பூஜா பூமி என்ற போர்வையில் அழிக்கப்பட்டு
வருகின்றது.

இவ்வாறான நிலையில் திருகோணமலை- மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 64ஆம்
கட்டை மலையடி பிள்ளையார் ஆலயமும் இதற்கு விதிவிலக்கல்ல.

தமிழர்களின் நீண்ட வரலாற்றை கொண்ட இப் பகுதியில் சம்பூரில் கண்டெடுக்கப்பட்ட
சுடு மண் சிற்பங்கள் இதற்கான வரலாற்று சான்றுகளாக உள்ள நிலையில் அங்குள்ள
ராஜவந்தான் எனும் மலைப் பகுதியில் தற்போது பூஜா பூமி என்ற போர்வையில் பௌத்த
விகாரை மற்றும் புத்தர் சிலையை நிறுவி பிள்ளையார் ஆலயத்தை வழி பட விடாது
தடுத்து நிறுத்தியதுடன் அதனை சூழவுள்ள சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்புக்களையும்
அபகரித்துள்ளனர்.

பௌத்த விகாரை

குறித்த பௌத்த விகாரையானது பலல்லே ரத்னசேர எனும் பிரதான பௌத்த பிக்கு
தலைமையில் இடம் பெற்றதுடன் கொட்டியாரம ஸ்ரீ பத்ர தாது ரஜமகா விகாரை எனும்
பெயரையும் சூட்டியுள்ளனர்.
ஆனாலும் குறித்த பகுதியில் பெரும்பான்மை சிங்களவர்களே இல்லாத இடத்தில் இந்த
பௌத்த விகாரை எதற்கு எனவும் ஒரு கேள்வி மக்களுக்குல் காணப்படுகிறது.

இது குறித்து மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தின் தலைவர் சிவஸ்ரீ. இ.
பாஸ்கரன் குருக்கள் தெரிவிக்கையில் “திருகோணமலை மட்டக்களப்பு A15 வீதியில்
அமைந்துள்ள 64ம் கட்டை மலை விடயமாகவும் மலையடி வாரத்தில் இருக்கின்ற
பிள்ளையார் ஆலய விடயமாகவும் சுருக்கமாக கூறலாம் என நினைக்கிறேன்.

64ஆம் கட்டை
மலையானது ஒரு தொன்மை வாய்ந்த மலை சமயம் சார்ந்த அடையாளங்கள் கொண்ட இடம் இன்று
இற்றைக்கு நாங்கள் அறிந்த வகையில் நாங்கள் இந்த பூமியில் என்ற வகையிலும் பலம்
தமிழர்கள் அந்த மலையில் பூத வழிபாடுகளையும் தானாகவே அந்த மலையில் வளர்ந்த
லிங்கத்தையும் சிவனாக வழிபட்டு வந்தனர்.
காலம் காலமாக வழிபட்டு வந்த நிலையில் இங்கு கல் உடைப்பு தொழிலை பலம் தமிழர்கள்
சுமார் 2016ம் ஆண்டு வரை செய்து வந்தனர்.

அப்போது அங்கு அருகாமையில் மலையடி
வாரத்துக்கு கீழே வீதியோரமாக ஒரு பிள்ளையாரை பழமை வாய்ந்த முறையில் வழிபட்டு
அந்த இறைவனை ஆசி பெற்று அவர்களுடைய கல் உடைப்பு தொழிலை செய்து வந்தனர்.

மலை மேல் ஏறி கல் உடைப்பு செய்யும் போது இந்த பிள்ளையாரை வழிபட்டுத்தான் மேலே
சென்று கல் உடைப்பு செய்து அதாவது வழமை வாய்ந்த முறையில் நெருப்பு வைத்து அதனை
சூடாக்கி அதன் மூலம் கல்லை வெடிக்க வைத்து சிறு சிறு கற்களாக கீழே உருட்டி
விட்டு உடைப்பார்கள்.

அங்கு அவர்கள் பூத வழிபாடு சூழங்களை வைத்து வழிபட்டு வந்தார்கள்.

தானாகவே
உருவாகிய இந்த மலையில் இருந்த லிங்கங்கள் தற்போது அழிக்கப்பட்டுள்ளன. இத்
தருவாயில் 2014ஆம் ஆண்டுக்கு பிற்பாடு அந்த மலை கல் உடைப்புக்காக சீனா
நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு அதன் பிற்பாடு 2017 இல் பௌத்த மதத்தின் ஆதிக்கம்
அங்கு உள்ளே நுழைந்தது. அதன் போது மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் கல் உடைப்பு
தொழில் முற்றாக பொது மக்களுக்கு தடை தடை செய்யப்பட்டது.

 சட்டப் பிரச்சினை

அந்த வேலையில் இந்த
64ஆம் கட்டை கிராம மக்கள் பாமர மக்களின் கல் உடைப்பு தொழில் முற்றாக
பாதிக்கப்பட்டு இற்றை வரைக்கும் அந்த மக்கள் தொழில் வாய்ப்பின்றி யாசகம்
பெறும் நிலையிலும் கூடுதலான மக்கள் நகர்ப் புறங்களுக்கு வந்து யாசகம் பெற்று
வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் அங்கு 2017ம் ஆண்டு பன்சலை அமைக்க
இராணுவம்,பொலிஸார்,கடற்படையினர் உதவி இற்றை வரைக்கும் அந்த பன்சலை கட்டிக்
கொண்டு இருக்கிறார்கள்.

இந்த பன்சலை அமைப்பின் பிற்பாடு கீழே உள்ள எங்களுடைய அடையாளங்கள்
அழிக்கப்பட்டதை நாங்கள் பார்க்கச் சென்ற போது எங்களுக்கும் பௌத்த மத
குருக்களுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டு மேலே செல்ல அனுமதிக்க விடாது
பாதுகாப்பு தரப்பினர் பொலிஸார் இணைந்து மக்களை வெளியேற்றினர்.

தொடர்ச்சியாக
சட்டப் பிரச்சினைகளுக்கும் உள்ளாகி நீதிமன்றம் வரை சென்றுள்ளது.இத்தனைக்கும்
கீழே உள்ள ஆலயத்தை அழிவடைய செய்யாமல் வீதி அபிவிருத்தியின் போது வீதி அகன்ற
காரணத்தினால் வீதி ஐந்து அடி இடைவெளிக்குள் மலையடி பிள்ளையார் ஆலயம்
வந்ததினால் மக்கள் வழி பட முடியாமல் சேதமுற்றும் வீதிக்கு கீழே இருப்பதால்
நாங்கள் புனரமைக்க முற்பட்டோம் அதற்கு அருகாமையில் உள்ள காணியில் அதை
புனரமைக்க விடாமல் பௌத்த மத குருக்கள் தலைமையில் பிரதேச செயலாளர் அதை தடை
செய்தார்.

ஆனால் அந்த காணியை இன்று வரை நாங்கள் பிள்ளையாரை புதிதாக அமைக்கவில்லை பழமையாக
இருந்து வந்த ஆலயத்தை புனரமைப்பதற்காக அனுமதி கோரும் போது பல திணைக்களங்களை
சாடி மூதூர் பிரதேச செயலாளர் இற்றை வரை புனரமைக்க விடாமல் தடை செய்துள்ளார்.
ஆனால் இத்தனைக்கும் ஐந்து ஆண்டுகளுக்குள் பௌத்த விகாரை மற்றும் ஆலயத்தின்
அருகில் புத்தர் சிலை அமைப்பதற்கும் இதே பிரதேச செயலாளர் இதே திணைக்களங்கள்
அனுமதி வழங்கியுள்ளது.

எமது பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயத்தை அமைப்பதற்கு இன்னும் தடை செய்து
கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. இது எங்களுக்கு மத உரிமையையும், மனித
உரிமையையும் மீறுவதாகவும் நாங்கள் கருதுகிறோம். பிரதேச மக்களும் இதை நினைத்து
வேதனைப்படுகிறார்கள்.
கடந்த ஆட்சியின் போது புனரமைக்க விடாது தடுத்து நிறுத்தினர்.

அநுர அரசு

தற்போது
ஆட்சிக்கு வந்திருக்கின்ற அநுர அரசுடைய செயற்பாடுகள் மூலமாக எங்களுக்கு மத
சுதந்திரம் ஒன்று கிடைக்கும் என பரிநம்பிக்கையோடு இருந்து வருகிறோம்.இருந்த
போதும் பௌத்த மதத்தினுடைய செயற்பாடுகளுக்கு முன்னர் எப்படி இருந்ததோ அதே
முன்னெடுப்புக்கள் இது வரை நடந்து கொண்டிருக்கிறது.

பௌத்த விகாரை அமைத்து கொண்டு தான் இருக்கிறார்கள்.அதுவும் நடந்து கொண்டே
இருக்கிறது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்த எங்களுடைய சமமான மத உரிமை கிடைக்கும்
என்று ஆனால் கிடைக்கவில்லை.

இருந்தும் நாங்கள் பிரதேச செயலாளருக்கு அனுப்பிய
கடிதங்களுக்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. பழைய எழுத்து மூலமான
வார்த்தைகளே வந்த வண்ணம் உள்ளன. இது விடயமாக தற்போது ஆட்சியில் இருக்கின்ற
மதிப்புக்குரிய பிரதம மந்திரிக்கு இந்த விடயங்கள் முழுவதையும் நாங்கள் எழுத்து
மூலமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் அனுப்பியுள்ளோம் எந்த பதில்களும்
கிடைக்கவில்லை .

ஏதோ இந்த அரசின் ஊடாக எங்களுக்கும் இந்த மத சுதந்திரம்
கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.கிடைக்காத பட்சத்தில் நிச்சயமாக மத
உரிமைகளையும் மனித உரிமைகளையும் மீறப்படுகின்றது என்று வேதனைப்பட வேண்டியதொரு
விடயமாக காணப்படுகிறது ” என மேலும் ஆலய விவகாரம் தொடர்பில் பகிர்ந்து கொண்டார்.

இவ்வாறாக கடந்த கோத்தபாய ஜனாதிபதியாக இருந்த போது “ஒரே நாடு ஒரே சட்டம்” எனும்
தொல்பொருள் செயல் அணியை உருவாக்கினார்.

நில ஆக்கிரமிப்பு

இதற்காக குறித்த செயலணியின் தலைவராக
பௌத்த பிக்கு ஒருவர் நியமிக்கப்பட்டார்.இதனால் பூஜா பூமி என்ற போர்வையில்
அப்பாவி மக்களது விவசாய குடியிருப்பு காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு தற்போதைய
அநுர அரசாங்கத்திலும் தீர்வு இல்லாமல் உள்ளது.

சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்த மலையடிபிள்ளையார் ஆலயத்தை மீள கட்டுமானம்
செய்ய புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழி விட வேண்டும். பௌத்த ஆதிக்கம்
மேலோங்குவதை விடுத்து அரசியலமைப்பின் பிரகாரம் மதச் சுதந்திரம் மனித உரிமைகள்
உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் தேசிய கட்சிகள் அவ்வப்போது தேர்தல் காலங்களில் மாத்திரம் தமிழ் தேசியம்
பேசும் இவர்கள் மக்களின் நில அபகரிப்பு ,மத சுதந்திர விவகாரத்தில் மாத்திரம்
இது போன்ற அநீதிகளுக்கு குரல் தொடர் குரல் கொடுப்பதில் இருந்து விலகியுள்ளனர்.
உரிமைகளுடனும் சுதந்திரத்திரமாகவும் வாழ வழியமைக்க அதற்கான வழி வகைகளை செய்து
கொடுக்க வேண்டும்.

எனவே தான் இது போன்ற பல நில ஆக்கிரமிப்பு வடகிழக்கு தாயகங்களில்
ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கவும் அபகரித்த நிலங்களை மீட்கவும் அனைவரும் கட்சி
இன மத பேதமின்றி ஒத்துழைக்க முன்வர வேண்டும்.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு,
16 September, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.

<!–


இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,

–>

NO COMMENTS

Exit mobile version