படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் உடல் மிதிகமவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அவரது உடல் நேற்றிரவு (22.10.2025) வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ‘நான் வரும் வரை உயிரை பிடித்து வைத்து இருந்திருக்கலாமே, தயவு செய்து என்னிடம் ஒருமுறை பேசுங்கள்’ என அவரது மனைவி கதறி அழுதுள்ளார்.
படுகொலை தொடர்பான விசாரணை
தனது உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது படுகொலை தொடர்பான விசாரணையை 4 பொலிஸ் குழுக்கள் ஆரம்பித்துள்ளன.
பொது நாள் என்பதால், பொதுமக்கள் அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நான்கு குண்டுகள்
அங்கு துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் வெள்ளை நிற உடை மற்றும் கருப்பு முகமூடி அணிந்து பொதுமக்களுடன் பொதுமக்களாக நின்று கொண்டிருந்தார்.
இதனையடுத்து, லசந்தவிடம் ஒரு கடிதத்தில் கையெழுத்து வாங்க சென்ற பெண், அவரது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த போது துப்பாக்கிதாரி அலுவலகத்துக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
லசந்தவின் தலை மற்றும் கழுத்தில் நான்கு குண்டுகள் சுடப்பட்டதையடுத்து, துப்பாக்கிதாரி மோட்டார் சைக்கிளில் மற்றொருவருடன் தப்பிச் சென்றுள்ளார்.
