நீதிமன்றக் காவலில் உள்ள தனது வெளிநாட்டு வாடிக்கையாளரின் சார்பாக காணொளி அழைப்பை மேற்கொள்ள முயன்ற இளம் சட்டத்தரணி ஒருவரை நீதிமன்றம் கடுமையாக
கண்டித்துள்ளது.
நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இந்த சம்பவம் நேற்று(20) இடம்பெற்றுள்ளது.
அத்துடன் குறித்த வழக்கில் எதிர்காலத்தில் முன்னிலையாவதற்கு சட்டத்தரணிக்கு
தடையுத்தரவையும் நீதிவான் பிறப்பித்துள்ளார்.
வழக்கு விசாரணை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 46.6 கிலோகிராம் குஷ் ரகப்போதைப்பொருளுடன்
கைது செய்யப்பட்ட பின்னர் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட 21 வயது பிரித்தானிய
பெண் தொடர்பான வழக்கு விசாரணையின்போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ள தமது வாடிக்கையாளருடன்
பேசுவதற்கு சிறை அதிகாரிகளிடம் அனுமதி கோரியதாகவும், அத்துடன் தனது கையடக்கத்
தொலைபேசியை செயல்படுத்தி தனது நீதிமன்றத்துக்கு எடுத்துவரும் பையில் வைப்பதை
அதிகாரிகள் கவனித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அதிகாரிகளால் குறித்த சட்டத்தரணியிடம் இருந்து கையடக்கத்தொலைபேசி
பறிமுதல் செய்யப்பட்டு நீதிவானிடம் ஒப்படைக்கப்பட்டது.
சட்டப்பூர்வ உரிமம் இரத்து
இந்த விடயம் உயர்நீதிமன்றுக்கு தெரிவிக்கப்பட்டால், சட்டத்தரணியின்
சட்டப்பூர்வ உரிமம் இரத்து செய்யப்படலாம் என்று நீதிவான் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
அலுவலகப்பணிகளுக்காக நீதிமன்றத்திற்குள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்து வர
சட்டத்தரணிகளுக்கு அனுமதி இருந்தாலும், அத்தகைய சலுகைகளை தகாத நடத்தைக்காக
தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று நீதிவான் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், வழக்கின் பிரதிவாதியான பிரித்தானிய பெண்ணை செப்டெம்பர் 3 ஆம்
திகதி வரை காவலில் வைக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.
தெற்கு லண்டனைச் சேர்ந்த 21 வயதான சார்லட் மே லீ, என்ற பெண், நாட்டிற்குள்
சட்டவிரோதமாக போதைப்பொருளை கொண்டு வர முயன்றதாகக் கூறி, 2025 மே 13 அன்று
இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
