Home இலங்கை அரசியல் சட்ட ரீதியாக வழங்கப்பட்ட ‘பார் பெர்மிட்’டை பலவந்தமாக இரத்துச் செய்ய மறுக்கும் அநுர அரசு

சட்ட ரீதியாக வழங்கப்பட்ட ‘பார் பெர்மிட்’டை பலவந்தமாக இரத்துச் செய்ய மறுக்கும் அநுர அரசு

0

தேசிய மக்கள் சக்தி அரசு புதிதாக மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கவில்லை, வழங்கப்போவதும் இல்லை என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடந்த ஆட்சியில் சட்ட ரீதியில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களைப் பலவந்தமான முறையில் இடைநிறுத்தினால் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும்.

அனுமதிப்பத்திரம் சட்டரீதியில் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அது சட்ட ரீதியான ஆவணமாகும். அதைப் பலவந்தமான முறையில் இரத்துச் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள்

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(21)  நடைபெற்ற கிளீன் ஸ்ரீ லங்கா
செயற்றிட்டம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்
கோடீஸ்வரன்(K. Kodeeswaran), “கல்முனை – நீலாவணை பகுதியில் புதிதாக மதுபான
நிலையங்களைத் திறப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அந்தப் பிரதேச மக்கள்
எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். கடந்த அரசு வழங்கிய மதுபானசாலை
அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதாக அரசு குறிப்பிட்டது.

ஆனால், இதுவரை
அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.” – என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளிக்கையில் சபை முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது  தொடர்பில் அவர் மேலும் உரையாற்றியதாவது,

“தேசிய மக்கள் சக்தி தலைமையிலான எமது அரசு புதிதாக மதுபானசாலை
அனுமதிப்பத்திரங்கள் ஏதும் விநியோகிக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் பெரும்பாலான மதுபானசாலை
அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் மதுபானசாலை பத்திரங்கள்
குறித்து நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஹன்சாட்டில்
பதியப்பட்டுள்ளது.

 சட்ட ரீதியான ஆவணம்

அனுமதிப்பத்திரம் சட்ட ரீதியில் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அது சட்ட ரீதியான
ஆவணமாகக் கருதப்படும். அரசியல் ரீதியில் விருப்பம் இல்லாவிடினும் அதனை
இரத்துச் செய்வது சட்டச் செயற்பாடாகும்.

அரசால் பலவந்தமான முறையில் இரத்துச்
செய்ய முடியாது.

இருப்பினும் நிர்வாகக் கட்டமைப்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறான பழைய குப்பை மேடுகளை கிளீன் செய்யவே முயற்சிக்கின்றோம்.

எமது அரசு
புதிதாக மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கமாட்டாது.

சட்ட ரீதியில் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களைப் பலவந்தமான முறையில்
இடைநிறுத்தினால் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும். இருப்பினும் நிர்வாகம் மற்றும்
சமூகக் கட்டமைப்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version