அமெரிக்க(us) ஜனாதிபதியாக கடந்த 20 ஆம் திகதி பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப்(donald trump) பதவியேற்று ஐந்து நாட்களுக்குள் அவர் தெரிவித்த பல விடயங்கள் பொய்யானவை என்ற தகவல் அம்பலமாகியுள்ளது.
அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகள், செய்தியாளர் சந்திப்புகளில் அவர் பங்கேற்று வாய்க்கு வந்ததைப் பேசியிருப்பதாகவும், அதில் பல தகவல்கள் பொய்யானவை என்றும் கூறப்படுகிறது.
பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
தாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதாரக் கூட்டமைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற டொனால்ட் டிரம்ப், 2024ஆம் ஆண்டு அவர் பெற்ற வெற்றி பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றிருப்பதாக வர்ணித்து தன்னையே புகழ்ந்துகொண்டார். அத்துடன், அமெரிக்க மக்கள் அவருக்கு மாபெரும் வெற்றியை வழங்கியதாகவும் கூறியிருக்கிறார்.

ஆனால், உண்மை நிலவரம் அப்படியில்லை என்கிறது அசோசியேட் பிரஸ்.
அது வெளியிட்டிருக்கும் வாக்குப் பதிவு நிலவரத்தில், டிரம்ப் 2024ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குகள் 312. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் பெற்ற வாக்குகள் 226.
இளைஞர்களின் அதிக வாக்குகள்
இதனை வாக்குச் சதவீதத்தில் சொல்ல வேண்டும் என்றால், டிரம்ப் 49.9 சதவீதமும், ஹாரிஸ் 48.4 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். ஆனால், இந்த குறைந்த இடைவெளிக்கும், டிரம்ப் சொல்லும் மகத்தான வெற்றிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இரண்டும் ஒன்றல்ல. ஆனால் உண்மையில், 2020ஆம் ஆண்டு டிரம்ப் 70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்திருந்தார்.

அதுபோல, அவருக்கு இளைஞர்களின் அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளிக்கையில் கூறியிருந்தார். அதுவும் பொய்யென வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
18 – 29 வயதுடையவர்களிடையே 4 சதவீத புள்ளிகளும் 30 – 44 வயதுடையவர்களிடையே 3 சதவீதப் புள்ளிகளும் ஹாரிஸ்தான் பெற்றிருக்கிறார். 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் புள்ளிகளே டிரம்புக்குக் கிடைத்திருக்கிறது என ஏபி தரவு தெரிவிக்கிறது.

