Home இலங்கை அரசியல் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக முடிவு எடுக்கவில்லை – பொ. ஐங்கரநேசன்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக முடிவு எடுக்கவில்லை – பொ. ஐங்கரநேசன்

0

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இதுவரையில் முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் (P. Ayngaranesan) தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி அமைத்துள்ள அணியில் பசுமை இயக்கமும்
இடம்பெற்றுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் அதுபற்றி பொ.
ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் ஜே.வி.பி (JVP) கணிசமான ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலிலும் ஜே.வி.பி வெற்றி

இவ் வெற்றியைத் தமிழ்த்தேசிய அரசியலில்
ஏற்பட்டுள்ள ஒரு பின்னடைவாகவும், உள்ளூராட்சித் தேர்தலிலும் ஜே.வி.பி வெற்றி
பெற்றால் அது தமிழ்த்தேசிய அரசியலுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்
எனவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஜே.வி.பி எப்பாடுபட்டேனும் தமிழ் மக்கள் மத்தியில் வேரூன்றிவிட வேண்டும் என்று
தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. அண்மையில் அரசாங்கம் வெளியிட்ட பாதீட்டு
அறிக்கை இதனைத் தெளிவுபடுத்துகிறது.

இவற்றைக் கருத்திற்கொண்டு தமிழ்த்தேசிய
அரசியற் கட்சிகள் சில கூட்டணி அமைத்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது
குறித்து அக்கறை காட்டி வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கட்சிகள் பெற்ற பின்னடைவு கட்சிகளின்
பிளவினால் மாத்திரம் ஏற்பட்ட ஒன்று அல்ல. யுத்தத்துக்குப் பின்னரான இளைய
தலைமுறையிடம் தமிழ்த்தேசிய அரசியலின் இருப்புக் குறித்துக் கட்சிகள்
எடுத்தியம்பாததே பிரதான காரணமாகும்.

இலஞ்சமாக மதுபான அனுமதிப் பத்திரங்கள்

தமிழ்த்தேசியக் கட்சிகளின் வேட்பாளர்கள் சிலர் தாங்கள் அமைத்துள்ள
கூட்டணிக்கும் மக்களுக்கும் விசுவாசம் இல்லாது பன்னாட்டு நிறுவனங்களுக்குச்
சேவகம் செய்யும் நோக்கில் அந்நிறுவனங்களிடம் இருந்து பலகோடி ரூபா பணத்தைப்
பெற்றுக்கொண்டு தேர்தலில் இறங்கியமையும், அரசிடம் இலஞ்சமாக மதுபான அனுமதிப்
பத்திரங்ளைப் பெற்று விற்றுச் சம்பாதித்தமையும் தமிழ்த்தேசியக் கட்சிகளின்
மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் கட்சிகளின் ஒற்றுமை முயற்சிக்கு ஒருபோதும்
எதிரானது அல்ல.

எனினும், கூட்டு என்பது தேர்தலில் ஆசனங்களை மாத்திரம்
குறியாகக் கொண்டிராது கொள்கை அடிப்படையில் அமைய வேண்டும் என்பதே எமது உறுதியான
நிலைப்பாடாகும். ஜே.வி.பி வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக அரசியல்
தரகர்களையும், தமிழ்த்தேசிய எதிராளிகளையும் ஆதரிப்பது தமிழ்த்தேசியத்தை மேலும்
பலவீனமடையச் செய்யும்.

இது உண்மையான தமிழ்த் தேசியவாதிகளின் வெற்றி
வாய்ப்பையும் பறித்துவிடும். இவற்றைக் கருத்திற்கொண்டே பசுமை இயக்கம்
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான உபாயங்களை வகுக்கும். இதுபற்றிய முடிவுகளைத்
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மக்களுக்குத் தானே அறியத்தரும் என்றும்
தெரிவித்துள்ளார். 

செய்திகள் – பு.கஜிந்தன்

You May like this



https://www.youtube.com/embed/dbUwcg0FoFs

NO COMMENTS

Exit mobile version