ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும்
மாவீரர் வாரம் இன்று(21.11.2025) ஆரம்பமாகின்றது.
இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளாக
அனுஷ்டிக்கப்படுகின்றது.
புலம்பெயர் நாடுகளிலும்..
1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின்
போராளியான லெப். சங்கர் முதல் வித்தாக வீரமரணமடைந்தார்.
அந்த நாளையே மாவீரர்
நாளாக 1989 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால்
அறிவிக்கப்பட்டது.
அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் தாயகத்திலும், புலம்பெயர்
நாடுகளிலும் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் மக்களால் வணக்க நிகழ்வுகள்
மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில், நவம்பர் 21 ஆம் நாள் மாவீரர் வாரம்
ஆரம்பமாகும். இந்த நாட்களில் தமிழ் மக்களால் வணக்க நிகழ்வுகள்
மேற்கொள்ளப்படும்.
இறுதி மாவீரர் நிகழ்வுகள் நவம்பர் 27 ஆம் திகதி நடைபெறும். அந்நாளில் தமிழ்
மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி ஈகைச்சுடர்
ஏற்றுவார்கள்.
பொதுவாக, தமிழர் தாயகத்தில் மாவீரர் வாரம் முழுவதும் மஞ்சள், சிவப்பு நிறக்
கொடிகள் பறக்கவிட்டு, மாவீரர்களுக்கான பாடல்கள் ஒலிக்கவிட்டு துயிலும்
இல்லங்களில் வணக்க நிகழ்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.
அதேபோல், புலம்பெயர்
தேசங்களிலும் இவ்வகையான வணக்க நிகழ்வுகள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
