2007 ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவரும் புகையிலை பொருட்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை மாலைதீவு சனிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதன் மூலம், தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதிக்கும் உலகின் ஒரே நாடாக மாலைதீவு ஆகியுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புகையிலை இல்லாத தலைமுறை
பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், புகையிலை இல்லாத தலைமுறையை உருவாக்கவும் 18 வயதுக்குட்பட்டவா்கள் புகையிலை பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய விதியின்படி, 2007 ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவா்கள் மாலைதீவில் புகையிலை பொருள்களை வாங்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது. இந்தத் தடை அனைத்து வகை புகையிலைக்கும் பொருந்தும்.விற்பனையாளா்கள் வயதை உறுதிப்படுத்திய பிறகே விற்பனை செய்ய வேண்டும்.‘
சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும்
இந்தத் தடை, மாலைதீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும். எலக்ட்ரோனிக் சிகரெட் மற்றும் வேப்பிங் பொருள்களின் இறக்குமதி, விற்பனை, விநியோகம், வைத்திருத்தல் மற்றும் பயன்பாட்டுக்கு முழு தடை உள்ளது.
இது அனைத்து வயதினருக்கும் பொருந்தும்.
18 வயதுக்குட்பட்டவருக்கு புகையிலை விற்றால் 50,000 ருஃபியா (சுமாா் ரூ.2.8 லட்சம்) அபராதம், வேப்பிங் சாதனம் பயன்படுத்தினால் 5,000 ருஃபியா (ரூ.28,000) அபராதம் விதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை, புகைபிடிப்பதற்கு எதிராக இதுபோன்ற சட்டத்தை இயற்றிய முதல் மற்றும் ஒரே நாடு நியூசிலாந்து, ஆனால் அது அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள், நவம்பர் 2023 இல் ரத்து செய்யப்பட்டது.
