திருகோணமலை
மூதூர் – மல்லிகைத்தீவு கிராமத்தில் உலக தொழிலாளர் தினம் இன்று வியாழக்கிழமை(01) காலை கொண்டாடப்பட்டது.
இதன்போது, தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் மூதூர் – மல்லிகைத்தீவில் உள்ள உழவர்
சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.
மூதூர் – மல்லிகைத்தீவு கிராம மக்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில், பிரதேச தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என
பலரும் கலந்து சிறப்பித்தனர்.
செய்தி – கியாஸ் சாபி
யாழ்ப்பாணம்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமையில் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு
செய்துள்ள மே தினம் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகி காங்கேசன்துறை வீதியிலிருந்து a9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் பொது நூலகம் வரை
சென்றடைந்து அங்கு கண்டன கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் 12 பொது
அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த மே தினம், தமிழ்த்
தேசியத்தையும், சமூக மாற்றத்தையும் ஒருங்கே வலியுறுத்தி முன் நகர்த்தும்
மக்கள் சக்தியை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்றுள்ளது.
இதில், இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம், கிராமிய
உழைப்பாளர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம்,
தமிழ் சிவில் சமூக மையம், வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம்,
போராளிகளின் நலன்புரிச் சங்கம், அகில இலங்கை, கடற்றொழில் மற்றும் கமத்தொழில்
சமூகங்களின் கூட்டமைப்பு, வலிகாமம் வடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம்,
சமூக மாற்றத்திற்கான ஊடக மையம், நிமிர்வு ஊடக மையம், மனித உரிமைகளுக்கான
தமிழர் அமைப்பு ஆகிய பொது அமைப்புக்கள் இணைந்துகொண்டன.
செய்தி – எரிமலை, தீபன்
