Home இலங்கை சமூகம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகள்

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகள்

0

கடற்றொழில் சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்
என்று ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி கடற்றொழில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும்
திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை நேற்று (01) காலை தொடங்கி வைக்கும் நிகழ்வில்
கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

முந்தைய அரசாங்கங்கள் போரை எதிர்பார்த்து செயற்பட்ட போதிலும், இந்த நாட்டில்
மீண்டும் எந்த வகையான யுத்தமும் ஏற்படாத வகையில் நாட்டில் அமைதியையும்
நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் பாடுபட்டு வருவதாக
ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த போரின் போது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள
அனைத்து நிலங்களும் மக்களுக்காக விடுவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்தியாவசிய வசதிகள் 

நாட்டைச் சுற்றியுள்ள கடல், தீவுகள் மற்றும் நிலத்தை மக்களுக்காகப்
பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும், அதில் எந்த விதமான
தாக்கத்தையும் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்தில் உள்ள கடற்றொழில் சமூகத்தினருக்கு நீர், மின்சாரம், எரிபொருள், குளிர்பதன சேமிப்பு வசதிகள், வலை
பதப்படுத்தும் மைய வசதிகள், ஏல மண்டப வசதிகள் மற்றும் வானொலி தொடர்பு மைய
வசதிகள் போன்ற அத்தியாவசிய வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக இந்த ஆண்டு அரசாங்கம் ரூ. 298 மில்லியன் ஒதுக்கியுள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்,
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல,
காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க மற்றும் நாடாளுமன்ற
உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், கடற்றொழில் மற்றும்
நீரியல் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கோலித்த கமல் ஜினதாச, வட மாகாண அரசு
அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைவர்கள் மற்றும் பலர் இந்த நிகழ்வில்
பங்கேற்றனர்.

NO COMMENTS

Exit mobile version