துணுக்காய் கல்வி வலயத்தில் ஏற்பட்ட 44 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வெளிவலயங்களில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள போதும் நான்கு ஆசிரியர்கள் மாத்திரமே இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன், இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (17) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துரையாடிய போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திறந்த போட்டிப் பரீட்சை
அவர் மேலும் கூறுகையில்,
நிச்சயமாக இந்த சிக்கல் நிலையைத் தீர்ப்பதற்கு வட மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
துணுக்காய் கல்வி வலயத்தில் பணியாற்றிய 44 பேர் இங்கிருந்து பணி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில், வெளிவலயங்களிலிருந்து 4 ஆசிரியர்கள் மாத்திரமே துணுக்காய் வலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.
40 ஆசிரியர்கள் இதுவரை துணுக்காய் வலயத்திற்கு வருகைதந்து தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை.
இவ்வாறு தமது கடமைகளை இதுவரை பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
ஆசிரியர் நியமனங்கள் திறந்த போட்டிப் பரீட்சை முறையில் இடம்பெறுவதால்தான் இத்தகைய சிக்கல்கள் காணப்படுகின்றன.
மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொண்டால் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும். எனவே, இனி மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்வதற்கு நாம் தீர்மானங்களை எடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
