கல்விச் சீர்திருத்தம் என்பது ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றி அமைப்பதாகும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டபோது பிரதமர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் சுமையாக அமையாத கல்வி முறைமையை உருவாக்குவது தமது அரசியல் இயக்கத்தினுள் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்ட ஒரு விடயம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சிறார்கள் மீது அழுத்தம்
பரீட்சைகளை மையமாகக் கொண்ட தற்போதைய கல்வி முறைமையினால் சிறார்கள் மீது அழுத்தம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், பெற்றோருக்கு ஏற்படும் அழுத்தம் மற்றும் போட்டித் தன்மையால் உருவாகி இருக்கும் தீமையான சமூக விளைவுகள் போன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் தீர்வு காணப்படும் என்றும் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு இடைவேளை
இதேவேளை, ஜனவரி முதலாம் திகதி முதல் பாடசாலை நேரம் ஒரு நாளைக்கு 50 நிமிடங்கள் அதிகரிக்கும் என்பதால், மாணவர்களால் அதைத் தாங்க முடியாது, எனவே தினமும் காலை 10.10 மணி முதல் காலை 10.30 மணி வரை மற்றும் மதியம் 12.10 மணி முதல் மதியம் 12.20 மணி வரை இரண்டு இடைவேளை நேரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அசோக டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, காலை 7.40 முதல் 8.30 மணி வரை, காலை 8.30-9.20 மணி வரை, காலை 9.20 -10.10 மணி வரை, காலை 10.30 -11.20 மணி வரை, காலை 11.20 முதல் மதியம் 12.10 மணி வரை மற்றும் மதியம் 12.20 -1.10 மணி வரை, பிற்பகல் 1.10-2.00 மணி வரை என வகுப்பு நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

