விவசாயிகளும் நுகர்வோரும் பாதுகாப்படைகின்ற வகையில் புதிய திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த 40 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி நேற்றைய தினம் (08) வெளிமடையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிய திட்டம்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுடைய அறுவடை மேற்கொள்ளப்படுகின்ற போது வெளிநாடுகளில் இருந்து உருளைக்கிழங்கும் வெங்காயமும் இறக்குமதி செய்கின்ற மனிதாபிமானமற்ற அரசாங்கமொன்றே இருக்கின்றது.
எனவே விவசாயிகளும் நுகர்வோரும் பாதுகாப்படைகின்ற வகையில் புதிய திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
குளிரூட்டி வசதிகள் ஆரம்பிக்கப்படுவதோடு பால் உற்பத்தியாளர்களையும் மிளகு உற்பத்தியாளர்களையும் பாதுகாப்போம்.
பச்சை வீட்டு நிர்மாணத்திற்காக சலுகை அடிப்படையில் கடன் வழங்குவோம் அத்தோடு பூக்கள் உற்பத்திக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.