தேசிய மக்கள் சக்தி கட்சியின் (National People’s Power) பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பில் இன்று (19) கட்சியின் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க (Nihal Abeysinghe) உள்ளிட்ட சிலர் இணையவுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக பெரும்பான்மை வாக்கு
இதற்கிடையில், சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கலந்துரையாடல் நேற்று (18) பிற்பகல் இடம்பெற்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த (17) நடைபெற்ற வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 187 வாக்குகள் அளிக்கப்பட்டு ஏகமனதாக திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.