கொழும்பு – தலவத்துகொட பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவர் மற்றும் அவரது மனைவியை 5 மில்லியன் கப்பம் கேட்டு மிரட்டிய இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தம்பதியினருக்கு, பணம் கேட்டு உள்ளூர் மற்றும் துபாயில் இருந்து தொலைபேசி அழைப்புக்கள் மூலம் கொலை மிரட்டல்கள் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட வர்த்தகர் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளித்ததைத் தொடர்ந்து, இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தொலைபேசி அழைப்பு
இதனை தொடர்ந்து, சம்பவத்துடன், தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களில், ஒரு சந்தேக நபரை நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 700 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர், நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இது தொடர்பில் நீதிமன்றத்தில், உண்மை அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.
மேலும், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பொலிஸ் அதிகாரிகள் தொலைபேசி பதிவுகளை ஆய்வு செய்து உள்ளூர் எண்ணையும் அழைப்புகளுக்குப் பின்னால் உள்ள சந்தேக நபரையும் அடையாளம் காண முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.