தீபாவளி பண்டிகை மற்றும் நீண்ட வார இறுதி முடிந்த பின்னர் சொந்த இடங்களுக்கு
சென்றிருந்த பலர் கொழும்புக்கு திரும்புவதற்காக ஹட்டன் பேருந்து நிலையத்தில்
நீண்ட வரிசையில் இன்று (22) காத்திருந்தனர்.
இதன்போது பேருந்துகள் போதியளவு சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என ஹட்டன்
பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் தெரிவித்தனர்.
வழக்கமாக பண்டிகை
காலங்களில் ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் அதிக பயணிகள் வருகை தருவார்கள் என
தெரிந்தும் போதுமான பேருந்துக்கள் இல்லை என குற்றம் சுமத்துகின்றனர்.
விசேட பேருந்து சேவை
பண்டிகையை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் தலைநகர்
உள்ளிட்ட இடங்களுக்குத் திரும்புவதற்காக விசேட பேருந்து சேவை தொடர்ந்தும்
முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
ஆனால் போதிய
அளவில் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கடும் சிரமத்திற்கு
உள்ளாகியதோடு ஹட்டன் மத்திய பிரதான பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் நீண்ட
நேரம் தூர சேவை பேருந்துகள் இன்மையால் பாரிய அசௌகரியங்களுக்கு முகம்
கொடுத்துள்ளனர்.
“ஒரே நேரத்தில் இவ்வாறு அதிக பயணிகள் பயணம் மேற்கொள்ளும் காலங்களில்
தேவைக்கேற்ப மேலதிக பேருந்துகளை சேவையில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும் பயணிகள் தெரிவித்தனர்.
ஹட்டன் டிப்போவின் உதவி
குறித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன்
டிப்போவின் உதவி செயல்பாட்டு மேலாளர் சமந்த ரத்நாயக்க தெரிவிக்கையில்,
இன்று (22) காலை முதல் ஹட்டனில் இருந்து கொழும்புக்கு மேலதிகமாக பேருந்துகள்
சேர்க்கப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள்
வந்ததால் இந்த நெரிசல் ஏற்பட்டதாக கூறினார்.
ஏனைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் இருந்து பல
பேருந்துகள் ஹட்டன் டிப்போவிற்கு சேவைக்காக இணைத்துக் கொள்ள
திட்டமிடப்பட்டுள்ளது,
மேலும் அந்த பேருந்துகள் வந்த பிறகு தற்போதுள்ள பயணிகள்
நெரிசல் குறைக்கப்படும்.
கொழும்புக்குச் செல்ல அதிக எண்ணிக்கையிலான பயணிகள் இருந்தாலும்,
கொழும்பிலிருந்து ஹட்டனுக்குத் திரும்ப பயணிகள் இல்லை என்று சமந்த
ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.
