ஜேவிபின் ஆட்சி வந்திராவிட்டால் இந்த பட்டலந்தை முகாம் பற்றிய விடயம் வெளியில் வந்திருக்க மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குறிப்பிட்டுள்ளார்.
மட்டு ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது பேசுபொருளாக இருப்பது பட்டலந்தை சித்திரவதை முகாம் பற்றியதானது. 1988ம் ஆண்டு நடைபெற்ற இந்த பட்டலந்தை சித்திரவதை முகாம் பற்றிய விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
ஜேவிபியினர் இரண்டாம் கட்ட புரட்சியினை மேற்கொள்ளும் போது அவர்களை அடக்குவதற்காக இந்த பட்டலந்தை சித்திரவதை முகாம் செயற்பட்டு வந்தமை மட்டுமல்லாது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரும் இதனுடன் சேர்த்து பேசப்படுகின்றது.
ஜேவிபி ஆட்சிக்கு வந்ததால் வெளிவந்த விடயம்
சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியின் போது இந்த முகாம் பற்றிய விசாரணைகள் ஆணைக்குழு மூலம் விசாரிக்கப்பட்டு அந்த அறிக்கை திறக்கப்படாமல் இருட்டில் புதைக்கப்பட்டு தற்போது 37 ஆண்டுகளுக்குப் பின் அதுவும் ஜேவிபியினர் ஆட்சிக்கு வந்த பின் தான் அந்த புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிக்கொணரப்படுகின்றன.
ஜேவிபின் ஆட்சி வந்திராவிட்டால் இந்த பட்டலந்தை முகாம் பற்றிய விடயம் வெளியில் வந்திருக்க மாட்டாது.
எனவே பாதிக்கப்பட்டவர்கள் தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாலேயே தற்போது இந்த பட்டலந்தை சித்திரவதை முகாம் பற்றிய விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
ஆனால் பட்டலந்தை சித்திரவதை முகாம் போன்று வடக்கு, கிழக்கில் பல முகாம்கள் சட்டரீதியாகவும், சட்ட முறையற்றும் காணப்பட்டன. அதிலும் மட்டக்களப்பில் சத்துருக்கொண்டான் வதை முகாம் மிகவும் பிரபலமானது.
ஜேவிபியினர் சித்திரவதைப்பட்ட விடயம் ஜேவிபியினர் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் கண்டறியப்படுகின்றது. எனில் இந்த நாட்டில் தமிழர்கள் ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலையில் இந்த நாட்டில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எவ்வாறு கண்டறிவது என்ற கேள்வி உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலதிக தகவல் – பவன்
