வடக்கு கிழக்கு தமிழர்கள் நீண்ட காலமாகச் சந்தித்து வந்த திட்டமிட்ட இன அழிப்புக்கு சர்வதேச மட்டத்தில் நீதி கோரும் மக்கள் போராட்டம் இன்று (26.07.2025) தமிழர் தாயகத்திலுள்ள எட்டு மாவட்டங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது.
இதற்கமைய, இன்று காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு உட்பட எட்டு மாவட்டங்களிலும் மக்கள் ஒன்று கூடினர்.
உண்மையான நீதி
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், படுகொலைகளால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், நிலமும் வளமும் பறிக்கப்பட்ட சமூக உறுப்பினர்கள், பெண்கள் அமைப்புகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் என பல தரப்பினர் கலந்துகொண்டனர்.
இவர்கள் அனைவரும், தங்களுக்கு நேர்ந்த இழப்புகளுக்கு பன்னாட்டு சுதந்திர நீதிமன்றம் ஒன்றின் மூலம் மட்டுமே உண்மையான நீதி கிடைக்கும் என வலியுறுத்தினர்.
