நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையில் நிவாரணப் பணியின் போது உயிரிழந்த விமானி குறித்து உருக்கமான பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
நேற்று (30) மாலை இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் – 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று வென்னப்புவ லுணுவில பாலத்திற்கு அருகில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழந்துள்ளதுடன் விபத்து சம்பவத்தின் போது விமானிகள் இருவர் உட்பட 5 விமானப்படை உறுப்பினர்கள் ஹெலிகொப்டரில் இருந்துள்ளனர்.
விமானப்படையின் அறிவிப்பு
பிரதேசவாசிகளும் காவல்துறையினரும் இணைந்து அவர்களை உடனடியாக மீட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் மேலும் நான்கு விமானப்படை அதிகாரிகள் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையின் விமானி
உருக்கமான குறிப்புகள்
திடீரென உயிரிழந்த இந்த விமானி குறித்து சமூக ஊடகங்களில் பல உருக்கமான குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த பதிவில், ”சின்னஞ்சிறு மகனின் அன்புக்குரிய தந்தையான நிர்மால், DITWA புயலினால் தனது உயிரை அகாலமாகப் பலியிட்ட இலங்கையர்களுடன் நேற்றைய தினம் இணைந்துகொண்டார் விலைமதிப்பற்ற இலங்கையின் விமானியாக, நாட்டின் இதயங்களில் அழியாத நினைவை வைத்துவிட்டு” என குறிப்பிடப்பட்டுள்ளது.
