Courtesy: Sivaa Mayuri
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகிய நான்கு முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்களில் எவரும் கடந்த வெள்ளிக்கிழமை வரை தமது பிரசார செலவுத் தகவல்களை, பிரசார நிதிச் சட்டங்களுக்கு அமைவாக வெளியிடவில்லை என்று தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேர்தல் செலவு விபரங்களை அந்த தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் இதுவரை 13 பேர் மட்டுமே சமர்ப்பித்துள்ளனர்.
ஒரு வாக்காளருக்கு 109 ரூபாய்
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் அனைத்துக் கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் நன்கொடை அளித்தவர்களின் பதிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் செலவுச் சட்டம் கூறுகிறது.
இந்தநிலையில் முதல் முறையாக இந்த சட்டம், கடந்த ஜனாதிபதி தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட்டது
அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் தமது பிரசார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளருக்கு 109 ரூபாய் என்ற அடிப்படையில், மொத்தம் 1,868.3 மில்லியன் ரூபாயை மாத்திரமே செலவிடமுடியும் என்று வரையறுக்கப்பட்டிருந்தது.
இதில் வாக்காளர்களை சென்றடையக்கூடிய அனைத்து வகையிலான பிரசார செலவுகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையகம் வலியுறுத்தியிருந்தது.