பொருளாதார வளர்ச்சிக்கு அமைய எதிர்வரும் காலங்களில் அரச மற்றும் தனியார் துறையினருக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (25) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றியதாவது,“2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மக்களுக்கு பயனுடையதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி
அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இது ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவுத் திட்டம், லிபரல் வாத திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் என்று எதிர்க்கட்சியினர் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் மறக்கடிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்படுகிறது.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை வரவு-செலவுத் திட்டத்தில் முதல் கட்டமாக குறிப்பிட்டுள்ளோம்.
அரச ஊழியர்களின் சம்பளம்
ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது. பாடசாலை அதிபரின் சம்பளம் 30,105 ரூபாவாலும், ஆசிரியர்களின் சம்பளம் 25,360 ரூபாவினாலும், இதர அரச சேவையாளர்களின் அடிப்படைச் சம்பளம் 15,750 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஒருசில வரையறைகளுக்கு மத்தியில் தான் அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் மாத்திரமே குற்றஞ்சாட்டுகிறார்கள். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஒருசில நிபந்தனைகளுக்கு மத்தியில் தான் வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
ஆகவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் எமது பதவி காலத்துக்குள் நிறைவேற்றுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.