நீதித்துறை சேவை ஆணையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நீதித்துறை அதிகாரிகளின்
நியமனங்கள், நீக்கங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகளை மறுபரிசீலனை
செய்யவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இதற்காக ஒரு சிறப்பு நாடாளுமன்றக் குழுவை நிறுவ வேண்டும் என்று எதிர்க்கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் ஒரு முன்மொழிவை
சமர்ப்பித்துள்ளது.
சர்வஜன பலய தலைவர் திலித் ஜெயவீர மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு, இந்த
முன்மொழிவை பாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இந்த கையளித்துள்ளது.
நீதித்துறையின் சுதந்திரம் குறைமதிப்பு
அண்மைய காலங்களில் நீதித்துறையின் நடத்தை குறித்து எதிர்க்கட்சியினர்
அதிருப்தி வெளியிட்ட நிலையிலேயே இந்த முன்மொழிவு வந்துள்ளது.
இந்த முன்மொழிவை கையளித்த பின்னர் கருத்துரைத்துள்ள திலித் ஜெயவீர, தற்போதைய
அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நீதித்துறையின் சுதந்திரத்தை
குறைமதிப்பிற்கு உட்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று
குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறை சேவையில் உள்ள நீதிபதிகளை நீக்குதல், இடமாற்றம் செய்தல் மற்றும்
பதவி உயர்வு ஆகியவற்றில் அரசியல் தலையீடு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்
கூறியுள்ளார்.
மேலும், வரலாற்றில் முதல் முறையாக, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில்
நீதிபதிகள் நீக்கப்பட்டதாக செய்திகளும் வெளியாகியுள்ளதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.
