Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் அதிகரிக்கும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மட்டக்களப்பில் அதிகரிக்கும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

0

மட்டக்களப்பு- ஆரையம்பதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு
சம்பவத்திற்கான நீதியினை வழங்கக்கோரி பொதுமக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது ஆரையம்பதி பிரதேச பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்று (3) மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. 

இதன்போது பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு நீதிவேண்டும்,வன்முறையின் சூத்திரதாரியை
சிறையில் அடை,சுத்தமான இலங்கையில் சூத்திரதாரிகளை ஒழியுங்கள்,வாள்வெட்டு
கும்பல்களை இந்த பிரதேசத்தில் இல்லாமல் செய்யுங்கள்,இழைக்கப்பட்ட அநீதிக்கு
நீதியைப்பெற்றுக்கொடு போன்று பல்வேறு கோசங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு
போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வாள்வெட்டு தாக்குதல்

கடந்த 20ஆம் திகதி மாலை ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில்
விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது ஆறு பேர் கொண்ட குழுவினரால் வாள்வெட்டு தாக்குதலில் இருவர்
படுகாயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த
நிலையில் இதுவரையில் நான்கு பேர் மட்டுமே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்
இதுவரையில் இருவர் கைதுசெய்யப்படவில்லையெனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் முறையான விசாரணைகளை
முன்னெடுக்கவில்லையெனவும் வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தினை இரண்டு
குழுக்களுக்குள் இடம்பெற்ற மோதல் சம்பவம்போன்று சித்தரிக்கும் செயற்பாட்டினை
காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் அவசர அவசரமாக வீட்டுக்கு
அனுப்பிவைத்து அநீதி இழைத்துள்ளதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில்
கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

மனுக்கள் கையளிப்பு

இனி வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என
வலியுறுத்தப்பட்டதுடன் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் இவ்வாறான
வாள்வெட்டுக்குழுக்கள் இங்கிருந்து அகற்றப்படவேண்டும் எனவும் கோரிக்கைகள்
முன்வைக்கப்பட்டது.

இந்த வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குழுவினர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்
கட்சியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களின் அரசியல் செல்வாக்கினால் இது
தொடர்பிலான முறையான விசாரணைகள் முன்னெடுக்காத நிலைமையும் காணப்படுவதாகவும்
போராட்டக்காரர்களினால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது பொதுமக்கள், விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து
வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்காவுக்கு மனு ஒன்றை மண்முனைப்பற்று பிரதேச
செயலாளரிடம் வழங்கினார்கள்.

மேலும் கிழக்கு மாகாண பொலிஸ்மாதிபர்,மாவட்ட செயலாளர் ,நாடாளுமன்ற உறுப்பினர்
சாணாக்கியனின் செயலாளரிடமும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துமாறும்
நிதியைப் பெற்றுக்கொடுக்குமாறும் கோரிய மனுக்கள் கையளிக்கப்பட்டன.

NO COMMENTS

Exit mobile version