புதிய இணைப்பு
யாழ். (Jaffna) நெடுந்தீவு பகுதியில் இயங்கி வரும் விடுதி ஒன்றில் புதிதாக இயங்கவுள்ள
மதுபானசாலை அனுமதியினை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் இன்று கவனயீர்ப்புப்
போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
குறித்த மதுபானசாலைக்கு அருகில் 100 மீட்டர் தூரத்தில் பாடசாலை, கோவில்கள்
என்பன அமைந்துள்ளதால் அப்பகுதிக்கு மதுபானசாலை அனுமதி வேண்டாம் என பொதுமக்கள்
இதன்போது வலியுறுத்தினர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
இது தொடர்பில் ஏற்கனவே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தமையால் மதுவரித்
திணைக்களம் தற்காலிக அனுமதி வழங்கியது.
குறித்த அனுமதியை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் பிரதேச செயலகம் மற்றும்
மதுவரித் திணைக்களத்திற்கு இடையில் இன்று பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல்
ஒன்று இடம்பெற்றது.
எனவே அனுமதியினை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் எனக் கோரிய குறித்த
போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்று (04.03.2025) காலையில் ஒன்று திரண்ட மக்கள்
மதுபானசாலைக்கு எதிராக பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு
கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுந்தீவு மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள்
தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தனர்.
போதையை ஒழிப்போம்
நெடுந்தீவில் வடக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் நடமாடும் சேவை நாளையதினம்
நடைபெறவுள்ள நிலையில் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது குடியை விடு பிள்ளைகளை படிக்க விடு, அரசியல் பேசவில்லை எம் ஆதல.கம்
பேசுகிறது, போதையை ஒழிப்போம் , அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வேணாம் வேணாம் சாவு வேணாம், எமது குடும்ப விளக்கை அணைத்து விடாதே உள்ளிட்ட
பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தை
முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி – பிரதீபன்
https://www.youtube.com/embed/TaA4OxVtzM4
