Home இலங்கை சமூகம் பீடாதிபதியின் பதவி விலகல் விவகாரம் : கலைப்பீட மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை

பீடாதிபதியின் பதவி விலகல் விவகாரம் : கலைப்பீட மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம் (S.Raguram) எந்த
அடிப்படையில் பதவி விலகினாரோ அந்த விடயத்துக்காக உயர்ந்த
கௌரவத்தோடு மீளவும் பீடாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம்
கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் மீளவும் பீடாதிபதியாக பேராசிரியர் ரகுராம் நியமிக்கப்படும்வரை கலைப்பீட மாணவர் ஒன்றியம் சாத்வீக ரீதியான போராட்டத்தை
முன்னெடுக்கும் என அதன் தலைவர் மனோகரன் சோமபாலன்
தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் (University of Jaffna) நேற்று (26.01.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து
தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாணவர்கள் மீது முறைப்பாடு

இங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பேரவைக் கூட்டம்,
கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராமின் பதவி விலகல்
என்பதை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகும் நிலையில் குறித்த விடயம்
தொடர்பில் இந்த ஊடக சந்திப்பை நடத்துகின்றோம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை
நுகர்ந்து பரமேஸ்வரன் ஆலயம், பொங்குதமிழ் தூபி முன்பாகவும் முச்சக்கர வண்டிகள்
சகிதம் நின்று ஏனைய மாணவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட வேளை கலைப்பீட
பீடாதிபதி, சட்ட நிறைவேற்று அதிகாரி, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்
என்பவர்களால் அவதானிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்படி உத்தியோகத்தர்களிடம்
குறித்த மாணவர் குழு தகாத வார்த்தைகளில் முரண்பட்டு பொதுமக்கள் மத்தியில் தகாத
வார்த்தைகளை மேற்கொண்டார்கள் என்ற அடிப்படையில், குறித்த மாணவர்கள் மீது
முறைப்பாடு முன்வைக்கப்பட்டு ஆரம்பகட்ட விசாரணை, இரண்டாம் கட்ட விசாரணை,
ஒழுக்காற்று சபைக் குழு, அதனைத் தொடர்ந்து பேரவை என்ற முறையில் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஒழுக்காற்றுச் சபையானது குறித்த மாணவர்களுக்கு குறித்த காலப்பகுதிக்கான
தண்டனையை வழங்கியிருந்ததாகவும் பேரவை அதனை கேள்விக்குட்படுத்தி பொது மன்னிப்பு
வழங்கியதாகவும் அறிவிக்கப்பட்டது. போதைவஸ்து பாவனை, மதுபான பாவனை என்பன தினமும் இடம்பெற்று வந்த அடிப்படையில்
இந்த முடிவு எடுக்கப்பட்டது என சொல்லப்பட்டது.

யாழ்ப்பான பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பு
காணப்படுகின்ற சில தடயங்கள் இங்கு போதைப் பொருள் பாவனைகள் பயன்படுத்தப்பட்டு
இருக்கலாம் என்று எண்ணத்தை எங்களுக்கு ஏற்படுத்துகின்றது.

மேற்படி விடயம் தொடர்பாக குறித்த மாணவர்கள் கல்லாசனம் அகற்றப்பட்டதையும் அதன்
விளைவாக அதனை விமர்சித்ததன் காரணத்தாலே பழிவாங்கப்பட்டோம் என்ற விடயத்தையும்
சொல்லி இருந்தனர்.

கல்லாசனம் அகற்றப்பட்டது என்ற விடயத்தை கேள்விக்குட்படுத்துகின்ற
பெரிதுபடுத்துகின்றவர்கள் ஏன் அந்த கல்லாசனம் அகற்றப்பட்டது என்ற கேள்வியை
எழுப்பியிருந்தால் இந்த ஊடக சந்திப்பை நடத்தியிருக்க வேண்டிய தேவை
வந்திருக்காது.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள்

கலைப்பீட மாணவர் ஒன்றியத்துடன்
கலைப்பீட பீடாதிபதி உரையாடி பத்து கல்லாசனங்கள் பொருத்தமான இடங்களில்
உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ முகநூல்
பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பரமேஸ்வரா ஆலயத்திற்கு முன்பாக கல்லாசனம் அகற்றப்பட்டது தொடர்பில் மாணவர்கள்
பலரும் எம்மிடம் மகிழ்ச்சியாக கருத்து தெரிவித்துள்ளனர்.

நான் எட்டு பேருக்கு மட்டும் கலைப்பீட மாணவ பிரதிநிதி அல்ல. 3500
மாணவர்களுக்கான தலைவராகவே நான் உள்ளேன். சகலரின் கருத்தையும் கேட்க வேண்டும்.
அவர்களின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறான சூழலில் பல்கலைகழக பேரவை குறித்த முறைப்பாடு தொடர்பாக ஒழுக்காற்று
குழுவின் முறைமைகளை கடந்து உண்ணாவிரதம் இருந்துவிட்டார்கள் என்ற காரணத்தின்
அடிப்படையில் வகுப்புத் தடையை விடுவித்து இருப்பது எங்களுக்கு மிகவும் கவலையாக
இருக்கின்றது.

மாணவர்களின் பிரச்சினை தானே போராட்டத்தில் கலந்து கொள்ளலாம் என பலர் கேட்கலாம்.
போராட்டம் இருக்கின்ற இடத்தில் இவ்வாறான விடயங்களை மேற்கொண்ட நபர்களும்
போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில் சமூகப் பொறுப்புள்ள பெண்களை மதிக்கின்ற
போதைப் பொருளுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற நாங்கள்
மதுபானத்துக்கு எதிராக செயற்படுகின்ற நாங்கள் எதனடிப்படையில் அந்த இடத்தில்
சமூகமளிக்க முடியும் என்ற கேள்வியை நான் சமூகத்திடம் எழுப்புகின்றேன்.

அதனாலேயே பேரவை கூட்டம் வரும் வரை நாம் மௌனம் காத்துக் கொண்டிருந்தோம்.
இனியும் மௌனம் காத்துக் கொண்டிருக்க முடியாது. இந்த மாணவ ஒழுக்காற்று விசாரணை
நடுநிலைப்படி ஒழுங்குமுறைப்படி நடத்தப்பட வேண்டும்.

கலைப்பீட முதலாம் வருட மாணவர்களின் பாடப் பிரச்சினை தொடர்பாக கோரிக்கை
முன்வைக்கப்பட்டது. இதற்கான முழுமையான தெளிவான பதிலை நாங்கள் கூறுகின்றோம். பல்கலைக்கழக மூதவையால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றறிக்கையின்படி பாடத் தெரிவு
அமைகின்றது.

2024 ஆம் ஆண்டு புதிய கலைப்பீட மாணவர் ஒன்றிய நிர்வாகம் பதவியேற்ற
நிலையில் குறித்த மாணவர்களுக்கு பத்து மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட
விரிவுரைகள் நிறைவடைந்திருந்தன. நாங்கள் பதவியேற்பதற்கு ஒன்றரை மாதத்திற்கு
முதலேயே பாடத் தெரிவு தொடர்பான பிரச்சினைகள் இருந்தது.

முதலாம் வருட மாணவர்களின் பிரச்சினை

அதற்கு பொறுப்பாக
இருந்த முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியம் பேசாமல் இருந்தது. தற்போது புதிய
கலைப்பீட மாணவர் ஒன்றியம் பதவியேற்று அடுத்த நாள் போராட்டம் செய்ய வேண்டும்
என்று
முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் கேட்டால் எந்த அடிப்படையில் நாங்கள்
போராட்டம் செய்ய முடியும் என்ற கேள்வியை நான் எழுப்புகின்றேன்.

கடந்த முறை இதே சம்பந்தமான பிரச்சினை நடந்து இதே மாதிரி போராட்டம் நடைபெற்ற
போது கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர், துறைத் தலைவர்கள், கலைப்பீட
மாணவர்களாகிய நாங்கள் இருந்தபோது பல்கலைக்கழக சட்டரீதியான முறைமையை
கேள்விக்கு உட்படுத்த முடியாது.

மாணவர்களுக்கு பிரச்சினை என்றால் இதற்கு
பதிலீடான முறைமையை கொண்டு வாருங்கள். அதனை கலைப்பீட நிர்வாகம் செய்யும் என்று
பீடாதிபதியால் சொல்லப்பட்டு இருந்தது.

ஆனால் 8 மாதங்களாக அமைதியாக இருந்து
விட்டு இன்னும் ஒரு வருட மாணவர்கள் வந்துவிட்ட நிலையில் தாங்கள் செய்த பிழைகளை
மறைப்பதற்காக செயற்படுவது எந்த வகையில் நியாயம்.

மாணவர்களுக்கு பாட சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்.
கலைப்பீட மாணவர் ஒன்றிய நிர்வாக கூட்ட அறிக்கையில் இந்த பிரச்சினை சம்பந்தமாக
ஒரு தீர்மானத்தை எடுத்து பீடச் சபையில் அது சம்பந்தமாக காட்சிப்படுத்தி பீடச்
சபையின் அனுமதியுடன் மாணவர்களுக்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

இதற்காக ஏனைய ஐந்து பல்கலைக்கழகங்களின் பாடத் தெரிவுகள் தொடர்பான விடயங்களை
ஆய்வு செய்து அதற்கான விடயங்களை செய்ய துறைத்தலைவர்களுடன் கலந்துரையாட
நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஆகவே முறைப்படி பாடப் பிரச்சினை சம்பந்தமாக நாம் நகர்வுகளை முன்னெடுத்து
வருகின்றோம்.
பாடப் பிரச்சினை சம்பந்தமாக போராடிய நபர்கள் கலைப்பீட மாணவர் ஒன்றியத்துடன்
எந்தவித உரையாடலையும் செய்திருக்கவில்லை.

முதலாம் வருட மாணவன் உள்ளிட்ட குறிப்பிட்ட இரண்டு கலைப்பீட மாணவர்களுக்கு
வகுப்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதில் நேற்று ஒரு உண்மையொன்று
வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது.

முதலாம் வருட மாணவன் திட்டமிட்டு குறித்த போராட்டத்தில் சிலரின் தூண்டுதலின்
அடிப்படையில் எங்களுக்கு எதிராக செயல்பட்டு, கலைப்பீட நிர்வாகத்தை குழப்ப
வேண்டும் என்ற அடிப்படையில் வழிநடத்தப்பட்டார்.

மீண்டும் நியமிக்கப்படல் வேண்டும்

முறையான வழியில்லாமல்
போராட்டத்தை
கையாண்டதன் அடிப்படையில் முதலாம் வருட மாணவன் வகுப்பு
தடைக்குள்ளாக்கப்பட்டார். குறித்த விடயத்தை நேற்று நடைபெற்ற விசாரணையில் சட்ட
நிறைவேற்று அதிகாரி,மாணவ ஒழுக்க அதிகாரி முன்னிலையில் அந்த மாணவன் ஒத்துக்
கொண்டிருக்கின்றார்.

இந்த விடயங்களை தேடி ஆராய்ந்து பார்த்தால் போராடியவர்களின் எண்ணத்திற்கும்
இதற்குமான தொடர்புகளை அறிந்து கொள்ள முடியும். என்னிடம் ஆதாரங்கள் இருந்தாலும்
அந்த ஆதாரங்களை நான் காட்சிப்படுத்த முடியாது.

குறித்த போதைப்பொருள் சம்பந்தப்பட்ட விடயத்தை பேரவையில் விசாரிக்காமல், மூன்று
விசாரணைகளில் உண்மை என்ற நிரூபிக்கப்பட்ட நிலையில் அந்த விடயம் உண்மை என்றால்
பீடாதிபதி சி.ரகுராம் பதவி விலகியதற்கு பேரவை எடுத்த முடிவுதான்
காரணம் என்றால் இது வெறுமனே பேராசிரியர் ரகுராமுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த
கலைப்பீட சமூகத்திற்கும் மேலே கொடுக்கப்பட்ட கறை, அவமானமாகவே நான்
பார்க்கின்றேன்.

பல்கலைக்கழகத்துக்கு ஒவ்வொரு மாணவனையும் அனுப்புகின்ற அம்மா, அப்பா, சகோதரர்கள்
மிகவும் அவமானப்படக்கூடிய விடயமாகவே இதனை நான் பார்க்கின்றேன்.

போதைப்பொருள் விடயத்திற்கு
நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எந்த நம்பிக்கையில் இங்கு பெற்றோர் தமது
பிள்ளைகளை அனுப்புவார்கள்.

தற்போது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு தண்டனை
விலக்களிக்க முடியும் என்றால் இதுவரை பல்கலைக்கழகத்தினால் தண்டனைக்கு
உள்ளாக்கப்பட்ட மாணவர்களுக்கு என்ன பதிலை பேரவையும் பல்கலைக்கழகமும்
சொல்லப்போகின்றது.

எந்த தவறிழைத்தாலும் உண்ணாவிரதம் செய்தால் வகுப்பு தடையை
விடுத்து உள்ளே வரலாம் என்ற முன்னுதாரணத்தை இந்த பேரவை மேற்கொண்டிருந்தால்
என்ன செய்யும் என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன்.

பண்பாட்டு அடையாளம், தமிழ் தேசியத்தின் இருதயநாதம் என்று அழைக்கப்படும்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இவ்வாறான போதைப்பொருள் தொடர்பான செயல்களை
அனுமதிக்கின்ற இந்த நிர்வாகம் சமூகத்திற்கு சொல்ல வருகின்றது.

கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் எந்த அடிப்படையில் அந்த பதவியில்
இருந்து விலகினாரோ அந்த விடயத்துக்காக உயர்ந்த கௌரவத்தோடு என்ன விடயத்திற்காக
பாடுபட்டாரோ அந்த விடயத்திற்கான வெற்றியோடு மீளவும் கலைப்பீட பீடாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும்.

நியமிக்கப்பட்டால் மாத்திரமே இந்த
விடயத்தை முன் கொண்டு செல்ல முடியும் என்ற அடிப்படையில் கலைப்பீட மாணவர்
ஒன்றியம் மீளவும் பீடாதிபதியாக ரகுராம் நியமிக்கப்படும்வரை சாத்வீக ரீதியான
போராட்டத்தை முன்னெடுக்கும்.” என தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/e1n09D5z5HA

NO COMMENTS

Exit mobile version