பிரபல பாதாள உலகக்கும்பல் தலைவர்களான கஞ்சிபாணி இம்ரான் மற்றும் குடு சலிந்து ஆகியோருக்கு இடையிலான மோதலின் எதிரொலியாகவே நேற்றைய தினம் பண்டாரகம பிரதேச துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பண்டாரகம துன்போதிய சந்தி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நேற்றைய தினம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு காரணமாக காரொன்றில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவர் பலியாகியிருந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த நபர் பாணந்துறை அளுபோகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது.
சிறைச்சாலை உத்தியோகத்தர்
குறித்த நபர் கடந்த 2021ஆம் ஆண்டு பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துறே மதுஷ் என்பவர் துபாயில் நடத்திய பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டதன் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் ஆகும்.
இந்நிலையில், உயிரிழந்த மாகந்துரே மதுஷின் கூட்டாளியான கஞ்சிபாணி இம்ரான் மற்றும் பாணந்துறை குடு சலிந்து மோதலின் எதிரொலியாகவே மேற்குறித்த முன்னாள் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
