நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை விநியோகிக்க பதிவாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கடந்த 2 ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, அவசர அனர்த்த நிலைமை காரணமாக காணாமல் போன ஒருவரைப் பற்றி 2 வாரங்களுக்குப் பின்னரும் தகவல் கிடைக்கவில்லை என்றால், அவருக்கு அல்லது அவளுக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நட்டஈடுப் பணம்
அதற்கமைய, இந்த அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை காணாமல் போயுள்ள 203 நபர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நட்டஈடுப் பணத்தை விரைவில் பெற்றுக்கொள்ளும் நோக்கில், இந்தச் சான்றிதழ்களை வழங்க அந்தத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கான தேவையான சட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக நபர் ஒருவர், உறவினர் அல்லது நண்பர் காணாமல் போயுள்ளார் என்பதை உரிய பிரதேச கிராம உத்தியோகத்தர் உறுதிப்படுத்தினால், அந்த மாவட்ட பிரதிப் பதிவாளருக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்துக்கு உள்ளாகி காணாமல் போன நபர் தொடர்பில் ஆட்சேபனைகள் எழவில்லை என்றால், பிரதேச செயலாளரினால் அங்கீகாரத்துக்காக அனுப்பப்படும் விண்ணப்பத்தை, பதிவாளர் நாயகத்தினால் அதிகாரம் அளிக்கப்பட்ட பிராந்திய பிரதி அல்லது உதவிப் பதிவாளர் நாயகம் அங்கீகரிப்பார்.
இறப்புச் சான்றிதழ்கள்
இதேவேளை, மத்திய மாகாண மக்களுக்காக இறப்புச் சான்றிதழ் விநியோகித்தல், காணாமல் போனவர்களின் இறப்புச் சான்றிதழ் விநியோகித்தல் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் விசேட நடமாடும் சேவையொன்று நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) நடைபெறவுள்ளது.
குறித்த சேவைகள் அனைத்தையும் அந்தச் சந்தர்ப்பத்திலேயே இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதிப் பதிவாளர் நாயகம் தரங்க சுபாஷினி தெரிவித்தார்.
சேதமடைந்த திருமண, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை வழங்குவதும் இந்த நடமாடும் சேவையின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய நாளை (13) நடமாடும் சேவை உடஹேன்தென்ன, இலக்கம் 1, தமிழ் மகா வித்தியாலயம், பரகல ஜனபதத்தில் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு – 0812224470
நாளை மறுதினம் (14) பிரதேச செயலகம் – தொலுவ காலை 9 மணி முதல் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு – 0812224470 அழைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
