Home இலங்கை அரசியல் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை எச்சரிக்கும் சரத் வீரசேகர

அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை எச்சரிக்கும் சரத் வீரசேகர

0

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.

அத்துடன் போராட்ட காலப்பகுதியிலும் அவர் முறையற்ற வகையில் செயற்பட்டதாகவும் அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் பிரிவினைவாதத்துக்கு எதிரான கூட்டணியினர் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட போது அதில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே சரத் வீரசேகர இவ்வாறு குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ”இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் இறையாண்மைக்கும், சுயாட்சிக்கும் சவால் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளார். நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார்.

அத்துடன் வியன்னா ஒப்பந்தத்தையும் மீறியுள்ளார்.

எமது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தின் போது அமெரிக்க தூதுவர் முறையற்ற வகையில் செயற்பட்டார். பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட்டார். அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.

ஆகவே இவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம்.

பல மில்லியன் டொலர் செலவு

பாலினம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட்  (US Aid) நிறுவனம் பல மில்லியன் டொலர்களை செலவழித்துள்ளாக அமெரிக்காவின் புதிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் கலாசாரத்தை சீரழிப்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆகவே இவ்விடயம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், நிதி பெற்றுக் கொண்டவர்களின் விபரங்களை பகிரங்கப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version