Home இலங்கை சமூகம் தமிழருக்கு ஏற்படப்போகும் ஆபத்து : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

தமிழருக்கு ஏற்படப்போகும் ஆபத்து : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

0

வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. தரம் 1
அனுமதிக்காக வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. இது எமக்கு
ஆபத்தான நிலைமை. அனைவரும் இதனைக் கவனத்திலெடுக்கவேண்டும் என வடக்கு மாகாண
ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.

குரும்பசிட்டி பொன்.பரமானந்தர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும்,
‘பரமானந்தம்’ மலர் வெளியீடும் பாடசாலை அதிபர் க.வசந்தரூபன் தலைமையில் இன்று
சனிக்கிழமை (31.05.2025) காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பரமானந்தம் நூலை வெளியிட்டு வைத்த ஆளுநர், முன்னாள்
அதிபர்களுக்கு நினைவுப்பரிசில்களையும் வழங்கி கௌரவித்தார். அத்துடன்
மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில்,

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசம்

போரால் இந்தப் பிரதேசங்கள்
பாதிக்கப்பட்டது மாத்திரமல்ல இந்தப் பாடசாலையும் பாதிக்கப்பட்டது. பல
குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமையும் ஏற்பட்டது. மீள்குடியமர்ந்த
பின்னர் இந்தப் பாடசாலையை முன்னேற்றுவதென்பது கடினமானதுதான். ஆனால் அதைச்
செய்துள்ளார்கள்.

பாடசாலைகளின் வளர்ச்சி அந்தப் பாடசாலையின் அதிபரின் கையில்தான்
தங்கியிருக்கின்றது. பாடசாலை அதிபரின் தலைமைத்துவத்துக்கு பழைய மாணவர்கள்,
புலம்பெயர்ந்துள்ள பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எல்லோரும் ஒத்துழைப்புக்
கொடுத்திருக்கின்றீர்கள். அவர்களைப் பாராட்டுகின்றேன்.

அதேபோல பாடசாலையின்
தலைமைத்துவமும் ஏனையோர் நம்பிக்கைகொள்ளும்படியாக வெளிப்படைத்தன்மையுடன்
இருந்தமையால்தான் இவ்வளவும் சாத்தியமாகியிருக்கின்றது.

ஒரு பாடசாலையின் வளர்ச்சி என்பது கல்வியின் தரத்தை உயர்த்துவது மாத்திரமல்ல,
மாணவர்களின் பண்புகளையும் மேம்படுத்துவதில்தான் தங்கியிருக்கின்றது. இங்கு
கற்கின்ற மாணவர்கள் எதிர்காலத்தில் இந்தப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக
பங்காற்றவேண்டும்.

இளம் சமூகத்திடம் வெளிநாட்டு மோகம்

இன்றும் எங்கள் இளம் சமூகத்திடம் வெளிநாட்டு மோகம் தொடர்ந்தும் இருக்கின்றது.
இங்கிருந்து முன்னேறுவோம் என்ற எண்ணம் இல்லை. வடக்கில் உள்ளதைப்போன்று வளங்கள்
வேறு எங்கும் இல்லை. இப்படியான வளங்கள் இருந்தும் நாம் அதனைப்
பயன்படுத்தவில்லை.

முல்லைத்தீவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை அண்மையில் நான்
கௌரவித்திருந்தேன். அவர்கள் விவசாயத்தில் சாதித்தவர்கள். அவர்கள் இங்கிருந்து
தம்மால் மிகச் சிறந்த தொழில்முனைவோராக வரமுடியும் என்று கூறினார்கள். அப்படி
இங்கிருந்து சாதிக்க இளையோர் எதிர்காலத்தில் முனையவேண்டும், என்றார் .

இந்த நிகழ்வில், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜமுனா ராஜசீலன்,
வலி. வடக்கு பிரதேச செயலர் சிவகெங்கா சுதீஸ்னர் ஆகியோர் சிறப்பு
அதிதிகளாகவும், தெல்லிப்பழை கோட்டக் கல்விப் பணிப்பாளர் வே.அரசசேகரி,
ஓய்வுபெற்ற உள்ளூராட்சி உதவி ஆணையாளர் வ.கிருஷ்ணசாமி ஆகியோர் கௌரவ
அதிதிகளாகவும் கலந்துகொண்டனர் 

NO COMMENTS

Exit mobile version